ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதும், அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், இதுகுறித்து தமிழக முதல்வர் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதுவும், பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நிபந்தனைகளுடன் இலங்கை அரசால் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கிடையில், இலங்கை அரசு,  கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை வழங்க மறுத்து வருவதுடன், ஒரே நபர் 2வது முறை கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில், கடந்த 3ம் தேதி  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். காங்கேசன் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை, 2 விசைப்படகையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 16ம் தேதி மீனவர்கள் 23 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களில் 20 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

இரண்டு மீனவர்களுக்கு ஆறு 6 சிறை தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதே போல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நம்பு முருகன் என்ற மீனவர் 2வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும்,  சிறையில் அடைக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.

முதல்நாளில், தங்களுடைய படகுகளில் கருப்பு கொடிகளை கட்டி இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரை மற்றும் கடலிலும் இறங்கி போராட்டம் நடத்தினார். அப்போது,  இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே மீட்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் போராட்டம், இன்று 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டமாக தொடர்ந்து வருகிறது. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தக்கு பேரணியாக செல்கின்றனர். இதையடுத்து இன்று காலை நடைபயணத்தை துவக்கி உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக  செல்கிறது. இவர்களுக்கு ஆதரவாக தீவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், பல்வேறு கட்சி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி செல்கின்றனர். அங்கு சென்றதும்,  டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, படகுகளின் உரிமம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டனர்.