கோவை:
சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் உலவுகின்றன.
கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா என்ற பெயரில் யோகா மையம் அமைத்து நடத்தி வருகிறார் ஜக்கி வாசுதேவ். வனப்பகுதிகளை அழித்து கட்டிடங்களை கட்டியிருக்கிறார், முறையற்ற வகையில் அந்த கட்டிடங்களுக்கு மின்சார வசதி பெற்றிருக்கிறார், யோகா வகுப்புக்கு அதீத கட்டணம் வாங்குகிறார் என்று பல்வேறு புகார்கள் ஜக்கி வாசுதேவ் மீது கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சாமியாரினிகள் கீதா, லதா ஆகியோர் குறித்து விவகாரம் வெடித்தது. இந்த பெண்களின் பெற்றோர், “எங்கள் பெண்களை மூளைச் சலவை செய்து, அந்த ஆசிரமத்தில் ஜக்கி வாசுதேவ் வைத்திருக்கிறார்” என்று புகார் கூறினர். மேலும் அந்த ஆசிரமத்தில் போதைப்பொருட்கள் புழங்கப்படுவதாகவும் கூறினர்.
இதற்கிடையே ஈஷா மையத்தில் உள்ள பள்ளியில் படித்த தனது மகனை, அங்கு சித்திரவைத செய்தார்கள் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரும் புகார் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜக்கி வாசுதேவுக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு தகவல் பரவியிருக்கிறது.
“ பொதுவாக சர்ச்சைகளுக்கு அவர் நேடியாக விளக்கம் கொடுப்பதில்லை. ஆனால் சமீபத்திய சர்ச்சைகளுக்கு அவர் நேரடியாக விளக்கம் அளிக்க விரும்பினார். ஆனால் தொடர்ந்து சர்ச்சைகள் எழும்பியதால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். இது உடல் நலனையும் கடுமையாக பாதித்துள்ளது. சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் ” என்று சொல்லப்படுகிறது.
அதே நேரம், “அவருக்கு பெரும் உடல் பாதிப்பு ஏதும் இல்லை. மைக்ரேன் தலைவலி அவருக்கு உண்டு. அதன் தாக்கத்தால் அசதியாக இருக்கிறார். மற்றபடி பெரிய பாதிப்பு ஏதும் இல்லை” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
ஜக்கி வாசுதேவுக்கு தற்போது ஐம்பத்தியொன்பது வயது ஆகிறது.