கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

கொரோனா ஊரடங்கினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்க வெளியீட்டுக்காகவே ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது. திடீரென்று ஜகமே தந்திரம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் பரவியது.

இது தொடர்பாகப் படக்குழுவினர் யாருமே எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

ஜகமே தந்திரம் வெளியீடு தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் : திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இறுதியாக தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் இச்செய்தியை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் கூட செய்யவில்லை. எனவே அவர் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதனையடுத்து தமிழில் உருவாகிவுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது சிங்கிள் பாடலான ‘நேத்து…’ என்கிற பாடல் வரும் மே 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ‘ரகிட ரகிட…’, ‘புஜ்ஜி…’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.