விசாகப்பட்டணம்: மிக விரைவாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் இந்த சாதனையைப் படைத்தார். இதன்மூலம் அவர் இலங்க‍ையின் ரங்கனா ஹெராத் வைத்திருந்த சாதனையை முந்தினார். ஹெராத் 47 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்த இடதுகை பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால், வெறும் 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.

இதே சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் 49 டெஸ்ட் போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க 50 டெஸ்ட் போட்டிகளிலும், பிஷான்சிங் பேடி மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் தலா 51 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

தற்போது 30 வயதாகும் ஜடேஜா, குஜராத்தின் செளராஷ்டிராப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இவர் மொத்தம் 156 ஒருநாள் போட்டிகளில் ஆடி 178 விக்கெட்டுகளையும், 44 டி-20 போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தற்போதைய நிலையில் இந்திய அணியில் அதிக முக்கியத்துவம் பெற்ற பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இவர் உலகின் சிறந்த ஃபீல்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.