மும்பை: மொத்தமாக 100 சர்வதேச டி-20 போட்டிகள் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் தேசமான இந்தியாவில், பொதுவாக, ஆண்கள் கிரிக்கெட் பெறும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட பெண்கள் கிரிக்கெட் பெறுவதில்லை எனலாம். ஆனாலும், பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் உள்ளன.

தற்போது தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு 6 டி-20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்ற வந்துள்ளது. இத்தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3-0 என்ற வலுவான முன்னிலை வகிக்கிறது.

இத்தொடரில் பங்க‍ேற்று அணியை வழிநடத்தியதன் மூலம் 100 டி-20 சர்வதேச போட்டிகள் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன்மூலம் தலா 98 சர்வதேச டி-20 போட்டிகள் விளையாடியவர்கள் என்ற பெருமையை வைத்திருந்த ரோகித் ஷர்மா மற்றும் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இவர் இதுவரை தனது டி-20 கேரியரில் 27 விக்கெட்டுகள் மற்றும் 2003 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 28.61% ஆகும். இவரின் இந்த சாதனையை குறிக்கும் வகையில், இவருக்கு சிறப்பு தொப்பி வழங்கப்பட்டது. அணியின் தலைமைப் பயிற்சியாளர் W.V.ராமன் இதை வழங்கினார்.