ஸ்ரீநகர்

ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் சையத் அலி ஷா கிலானி விலகுவதாக அறிவித்தது ஏற்கனவே எதிர்பார்த்தது என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து தனிநாடாக்கப் போராடி வரும் ஹுரியத் மாநாடு என்னும் பிரிவினைவாத அமைப்பின் தலைவராக சையத் அலி ஷா கிலானி பதவி வகித்து வந்தார்.  இவர் ஆரம்பத்தில் ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் உறுப்பினராக இருந்து பிறகு தனியா தெஹ்ரிக் இ ஹுரியத் அமைப்பைத் தொடங்கினார்.

இவர் இந்தியாவில் இருந்து காஷ்மீரைப் பிரித்து தனிநாடாக அறிவித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்தார்.  கடந்த 1972, 1977 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இவர் காஷ்மீர் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு இவருடைய தீவிர பிரிவினைவாத போக்கு காரணமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

தற்போது 90 வயதை நெருங்கி வரும் கிலானிக்கு இரு ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இதையொட்டி கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.  இவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.  இந்நிலையில் கிலானி நேற்று அனுப்பிய ஆடியோ செய்தி மற்றும் கடிதத்தில் தாம் ஹுரியத் மாநாடு அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கிலானியின் செய்து தொடர்பாளர் இந்த கடிதத்தில் கிலானி, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஹூரியத் மாநாடு அமைப்பின் உறுப்பினர்கள் தற்போது இருக்கிறார்கள்.  அத்துடன் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.   காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் ஹூரியத் உறுப்பினர்களின் செயல்பாடு குறைந்துவிட்டது.

இந்த அமைப்பில் இருந்து ஏராளமான உறுப்பினர்கள் விலகிவிட்டார்கள். அவர்களில் சிலர் தங்களுக்குள் குழு அமைத்து தனியாகக் கூட்டம் நடத்தத் தொடங்கிவிட்டு அந்த முடிவையும் அவர்களே வரவேற்கின்றனர்.  ஆகவே நான் அந்த அமைப்பிலிருந்து முழுமையாக விலகுகிறேன்.

நான் அடுத்து என்ன  செய்யப்போகிறேன் என்பது குறித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கிறேன். எனது அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டன என்பது வலியைத் தருகிறது.  உங்கள் தலைக்கு  மேல் இப்போது நிதி மற்றும் பிற முறைகேடுகளுக்காக நம்பகத்தன்மை எனும் வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது.  அமைப்பில் ஒழுக்கமின்மை மற்றும் பிற குறைபாடுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் புறக்கணிக்கப்பட்டன.

ஒரு வலுவான நம்பகத்தன்மை மிக்க அமைப்பை நிறுவ 27 ஆண்டுகளாக என்னை நீங்கள் அனுமதிக்கவில்லை.  ஆயினும் இன்று, நீங்கள் எல்லா வரம்புகளையும் தாண்டி தலைமைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆகவே நான் ஹூரியத் மாநாடு அமைப்பிலிருந்து முழுமையாக விலகுகிறேன்” என எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர், “ஐஎஸ் ஐ மற்றும் பாகிஸ்தானால் தொடர்ந்து கிலானி ஓரம் கட்டப்பட்டு வந்தார்,  எனவே இது நிகழும் என ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்து வந்தோம்.   பாகிஸ்தான் விதி எண் 370 விலக்கம் குறித்து காஷ்மீரிகள் போராடுவார்கள் என எதிர்பார்த்தது.  கிலானி இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் பிரச்சினையாகப் பாகிஸ்தான் மாற்றும் என எதிர்பார்த்தார்.  இரண்டும் நடக்காததால் அவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.