ரோம்: தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அதற்கு உரிமையையும் கோரியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள்.
இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற ஆய்வு நிறுவனம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் தலைவர் லூகி ஆரிஷியோ, “இம்மருந்து உடலில் செலுத்தப்படும்போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயல் இழக்க செய்யும். இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. எனினும் மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை காலத்திற்கு பிறகு நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இம்மருந்தினை எலிகளில் பரிசோதித்து பார்த்தபோது வைரஸ் தொற்றுவதை தடுக்கும் ஆன்டிபாடிகள் உருவானது தெரியவந்தது. தற்போது உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து டிஎன்ஏ புரோட்டின் மரபணு வகையைச் சேர்ந்ததாகும். இது எலெக்ட்ரோபொரேஷன் எனப்படும் மின் இடமாற்றி உத்தி மூலம் செலுத்தப்படும் போது, செல்களில் மின்புலம் உருவாகி ரசாயனம் அல்லது மருந்தினை மனித செல், தனதாக்கிக் கொள்ளும்.
இந்த வகையில், தடுப்பு மருந்து செல்களுக்குள் ஊடுருவிச் சென்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வகை மருந்து, குறிப்பாக நுரையீரல் செல்களில் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தகவல்கள் படிப்படியான ஆய்வுகளின் மூலம் தெரிய வரும் என்று இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாவும், அதற்கான காப்புரிமைக் கோருவதாகவும் ஏற்கனவே இஸ்ரேல் நாட்டின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த வரிசையில் இத்தாலியும் சேர்ந்துள்ளது. இதுவே ஒரு வணிகப் போட்டியாக உருவாகும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.