சென்னை: சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை என பல இடங்களில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்த வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதுபோல, பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிரான்ட், அப்பாசாமி மற்றும் பொதுப்பணித்துறைக்கு பொருட்கள் சப்ளை செய்த நபர்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் 2வது நாளாக தொடர்கிறது. திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட அதிகாரிள் தமிழ்நாட்டில் முகாமிட்டு சோதனைகளை நடத்தி வருகின்றன.
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று 2-வது நாளாக சோதனை நீடித்து வருகிறது. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வந்திருந்தார். அவர் இருந்தபோதே வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம், பொருட்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ. வே.கம்பன் வீடு உள்ளது. இங்கு நேற்று மாலை வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம், திமுக முன்னாள் கவுன்சிலர் சாமி ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
ஆனால், மீனா ஜெயக்குமாரின் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் அலுவலகம், சௌரிபாளையம் காசா கிராண்ட் நிறுவன அலுவலகம் ஆகிய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
கரூரில் மறைந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், கே.வி.பி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை தொடர்ந்து வருகிறது.
விழுப்புரத்தில் பிரபல தொழிலதிபர் பிரேம்நாத் என்பவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான கோல்டன் பார்க் சொகுசு விடுதி, மார்பல்ஸ் விற்பனை நிலையம் என மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.