ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானா மாநில அமைச்சர் வீடு உள்பட 50 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநில கவர்னர் தமிழிசை  திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதும், அங்கு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இவர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில், தெலுங்கானா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்து பேரம் பேசியதாக பாஜகவினரை கைது செய்தது. அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெலுங்கானா மாநில அரசின் அமைச்சர் மல்லா ரெட்டி வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்கள் என 50 இடங்களில்  சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கான மாநிலத்தில்,  தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சராக மல்லா ரெட்டி உள்ளார். இவரது மனைவி கல்பனா ரெட்டி. தம்பதிக்கு மகேந்திர ரெட்டி என்ற மகனும், மம்தா ரெட்டி என்ற மகளும் உள்ளனர்.

மல்லா ரெட்டிக்கு தெலுங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மருத்துவ பல்கலைக்கழகம், என்ஜினியரிங் கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும், மல்லா ரெட்டி நாராயணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளன. இவரது மகன் மகேந்திர ரெட்டி, மகள் மம்தா ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர ரெட்டி ஆகியோர் ரியல் எஸ்டேட் செய்து வருகின்ற னர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 3 பேரும் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிறுவனங்களில் வருமான வரி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 5 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு சொந்தமான ஓம் பள்ளியில் உள்ள பண்ணை வீடு, ரூயா ஜன பள்ளி, நெட்சில்லாவில் உள்ள கல்லூரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் அவரது மகன், மகள், உறவினர்கள் வீடு என 50 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை அவசர அவசரமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது,  தெலுங்கானா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், மாநில போலீசார் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தெலுங்கானா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]