சென்னை: கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது துரோகம்;  100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெருந்தோல்வி அடைந்தது  சமீபத்தில்  நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அரசியலில் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தி வருகிறார். மேலும் விஜயகாந்தின் மைத்துனர் மற்றும் மகன்களும் கட்சிக்குள் புகுந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சீனியர் உறுப்பினர்கள், அதிருப்தி அடைந்து தேமுதிகவை விட்டு வெளியேறி மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர்

சமீபத்தில்,  பெரம்பலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் காமராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். மேலும் பலர் கட்சி தாவி வருகின்றனர். இதனால் தேமுதிக கூடாரம் காலியாகி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  ஆசை வார்த்தை கூறி மோசம் செய்யும் கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது தனக்கும் கட்சிக்கும் செய்யும் துரோகம். “எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதற்காக கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்று நினைப்பது தவறானது” என்றும், 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக மீது அவதூறு பரப்புபவர்களின் பேச்சுக்களை கட்சி தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும்,  கழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.