பணமதிப்பிழப்பு காலத்தில் அதிக டெபாசிட்!! 18 லட்சம் பேர் சிக்கினர்

Must read

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது

டெல்லி:

பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு தொடர்பு இல்லாமல் கூடுதல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று லோக்சபாவில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வர் லோக்சபாவில் இன்று அளித்த எழுத்துப்பூர்வ பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் மின்னணு சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டது. ‘‘ஆபரேஷன் கிளீன் மணி பிராஜக்ட்’’ என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில் 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்’’ என்றார்.

‘‘இந்த நபர்கள் பணமதிப்பிழப்பு காலத்தில் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கும், கடந்த காலங்களில் இவர்கள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கிற்கும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு 8.38 லட்சம் ‘பான் கார்டு’ வைத்துள்ளவர்களிடம் இருந்து 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட பணத்திற்கு நியாயமான காரணம் தெரிந்தவுடன் சரிபார்க்கும் பணி முடிவுக்கு வரும்’’ என்று கேங்வர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘இவர்களிடம் எவ்வித சோதனையும், விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இவர்கள் மீதான நடவடிக்கை நேரடி வரிவிதிப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் பெட்ரோல் பங்க், காஸ் ஏஜென்சிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

உண்மையான விற்பனைக்கும், இவர்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள பணத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது. விற்பனையை விட பல மடங்கு கூடுதலாக வங்கிகளில் பணம் செலுத்தியுள்ளனர். இவர்கள் மீது வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’’ என்றார்.

‘‘கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை ஆயிரத்து 100 சோதனைகள் மற்றும் கணக்கெடுப்புகள் வருமான வரித் துறை மூலம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்து 100 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரூ. 610 கோடி மதிப்பிலான சோதனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 510 கோடி ரூபாய் ரொக்க பறிமுதல் தொடர்பான நோட்டீஸாகும். இதில் ரூ. 110 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களாகும். மேலும் சோதனையில் மூலம் கணக்கில் காட்டப்படாத ரூ. 5 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்று கேங்வர் லோக்சபாவில் தெரிவித்தார்.

More articles

Latest article