ஈரோடு: கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நடமாடும் தகனமேடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியுடன், கோவையைச் சேர்ந்த ஆதரவற்ற சடலங்களின் ஆதரவாளனாக  செயல்படும் ஆத்மா அறக்கட்டளை இணைந்து முதன்முறையாக இந்த சேவையை தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதிலும், தகனம் செய்வதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான தகன மேடைகளும் இல்லை. இதன் காரணமாக, தகனம் மற்றும் அடக்கம் செய்வதில் பல்வேறு தனியார் அமைப்புகள்  செயல்பட்டு வருகின்றன. அதுபோல கோவை மாவட்டத்தில கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆத்மா அறக்கட்டளை குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிவருகிறது.

கடந்த 2001ம் சரவணன் என்பவரால் தொடங்கப்பட்ட, ஆத்மா அறக்கட்டளை  பல்வேறு உறுப்பினர்களுடன்  சிறப்பாக தொண்டாற்றி வருகிறது. இதுவரை, 2000 ஆயிரம் ஆதரவற்ற உடல்களுக்கு மேல் அடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளது. மேலும், பல ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் உதவி வருகிறது. பல ஏழைகளுக்கு உணவுப்பொருட்களும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், முதன்முறையாக, கிராமங்களுக்கு சேவையாற்றும் வகையில், நடமாடும் தகன மேடையை அமைத்துள்ளது. ரூ.25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தகன மேடை மூலம் வீடுகளுக்கே சென்று, இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்ய முன்வந்துள்ளது.

இநத் ஆத்மா அறக்கட்டளை நிறுவனத்துடன், ஈரோடு மாநகராட்சி கைகோர்த்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் நடமாடும் மயான சேவை திட்டம் தொடக்கப்பட்டு உள்ளது. அதன்படி இறந்தவரின் உடல் தகனம் செய்ய பதிவு செய்து, அதற்கான கட்டணம் ரூ.7000 செலுத்தினால், இறந்தவரின் வீடுகளுக்கே சென்று, உடல் தகனம் செய்யப்படும்.

இந்த நடமாடும் தகன மேடை மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் இறந்தவரின் உடல் எரியூட்டப்பட்டு, குடும்பத்தினரின் அஸ்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.