புதுடெல்லி: கடந்த 1969 முதல், தான் துவக்கப்பட்ட 50 ஆண்டுகளில் பெரியளவிலான வளர்ச்சியை எட்டியுள்ளது இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ.

திருவனந்தபுரம் தும்பாவில் ஒரு தேவாலயத்தில் தொடங்கப்பட்ட இஸ்ரோ, முதன்முதலில் 30 முதல் 70 கிலோ எடை வரையில் மட்டுமே சுமந்துகொண்டு, 150 கி.மீ. உயரம் வரை மட்டுமே பறக்கும் வகையிலான அதிக சத்தம் எழுப்பும் ராக்கெட்டை மட்டுமே செலுத்தும் மையமாக இருந்தது.

ஆனால், இன்றைய இஸ்ரோவோ, 4,000 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு, 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன்கொண்டவற்றை ஏவும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

கிரையோஜெனிக் இன்ஜின் விஷயத்தில் அடைந்த வளர்ச்சியாகட்டும், 5 டன் எடைகொண்ட ஜிசாட் – 2 செயற்கைக்கோளை ஏவுவதாகட்டும், இஸ்ரோவின் வளர்ச்சி அபரிமிதமானது. கடந்த 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாளில் இஸ்ரோ துவக்கப்பட்டபோது, இந்தியாவிடம் வானியல் சார்ந்த உள்கட்டமைப்புகளோ அல்லது அதுதொடர்பான அறிவுநுட்பங்களோ கிடையாது.

எனவே, பெரிய ராக்கெட்டுகளை ஏவ முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது இதன் ராக்கெட் ஏவும் திறனே வேறு. பிஎஸ்எல்வி -ஐ எடுத்துக்கொண்டால், அதனால் ஒரேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்வது மட்டுமின்றி, அவற்றை வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தவும் முடியும்.

மேலும், இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் பலவிதமான செயற்கைக்கோள்களை செலுத்த முடியும் என்பது மட்டுமல்ல, வேறு கோள்களுக்கு செல்லக்கூடிய சந்திரயான் – 2 போன்ற விண்கலத்தையும் செலுத்த முடியும்.

இந்த வளர்ச்சியின் பின்னணியில் பலரின் தீவிர உழைப்பு அடங்கியுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன், “நாங்கள் தற்போது எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பத்தை வளர்த்து வருகிறோம். அதன் வழியிலேயே சந்திரயான் 1 மற்றும் 2 மற்றும் செவ்வாய் சுற்றுப்பாதை திட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டோம்.

எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான விதைகளை இப்போதே தூவி வருகிறோம். இதன்மூலம், நமது அடுத்த தலைமுறையினர், அடுத்த 50 ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை எட்டுவர்.

தற்போதைய நிலையில், பூமியின் வளங்கள் விரைவில் தீர்ந்துகொண்டு வருவதால், வாழ்க்கைக்கான வளங்களை நாம் பூமி தவிர்த்த பிற கோளங்களில் தேட வேண்டிய நிலை ஏற்படும். இந்த நோக்கத்தின் பொருட்டே நாங்கள் பிற கோள்களுக்கான விண்கலங்களை அனுப்பி வருகிறோம்” என்றார்.