டெல்லி: இஸ்ரோ உளவு தொடர்பான வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மீண்டும் முடிவெடுக்க உயர்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல்.
இஸ்ரோ தலைவராக கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பணியில் இருந்தபோது பல ஆய்வுகளை மேற்கொண்டார். உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தில் முக்கிய பொறுப்பு நாராயணனிடம் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், அவர்மீது உளவு புகார் கூறப்பட்டது. 1994 ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அவர், ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பான ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நம்பி, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவர் கைது செய்யப்பட்டதற்கு ஒரு மாதம் முன்னதாக, விசா அனுமதி காலத்தைக் கடந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததாக மாலத்தீவுகளைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்ணை கேரள காவல் துறையினர் கைது செய்திருந்தனர். சில வாரங்கள் கழித்து அவருடைய நண்பர், மாலத்தீவுகளின் தலைநகர் மாலே-யில் இருந்து வந்திருந்த பௌஜிய்யா ஹஸ்ஸன் என்ற பெண்ணை கைது செய்தனர். பெரிய மோசடி புகார் அப்போது உருவானது.
மாலத்தீவுகளைச் சேர்ந்த அந்தப் பெண்கள், இந்திய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, இந்தியாவின் ராக்கெட் ”ரகசியங்களை” திருடி பாகிஸ்தானுக்கு விற்றார்கள் என்று, காவல் துறையினர் அளித்த தகவல்களைக் கொண்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதனுடன் நம்பியையும் இணைத்து செய்திகள் வெளியாகின.
ஆனால், நம்பியோ நீதிமன்றத்தில், நான் ”என்ன குற்றம்” என்று நான் கேட்டேன். ”தொழில்நுட்பத்தை முறைகேடாக அளித்ததாக கூறப்படும் குற்றம்” என்று அவர்கள் கூறினார்கள். ”எனக்கு எதுவும் புரியவில்லை” என்று தெரிவித்ததாக அவரது சுயசரிதையில் கூறியுள்ளார்.
அவரது பல ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு பிறகு 1998ம் ஆண்டு இது வெறும் சந்தேகத்தின் பேரிலான வழக்கு எனக் கூறி, இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இந்த வழக்கிலிருந்து நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.50லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த உளவு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரான, குஜராத் முன்னாள் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஆர்பி ஸ்ரீகுமார், கேரள முன்னாள் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சிபி மேத்யூஸ், கேரளாவின் இரண்டு முன்னாள் போலீஸ் அதிகாரிகள் எஸ் விஜயன் மற்றும் தம்பி எஸ் துர்கா தத் மற்றும் ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி பிஎஸ் ஜெயபிரகாஷ் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு கேரள நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.
இதையடுத்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவது வழக்கின் விசாரணையைத் தடுமாறச் செய்யும் என்று கூறியிருந்தது. இது “மிகவும் தீவிரமான விஷயம்” என்றும், வெளிநாட்டுக் கைகளின் உத்தரவின் பேரில் பெரிய சதி நடந்திருக்கலாம் என்றும், விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) கிரையோஜெனிக் இன்ஜினைத் தயாரிக்கும் முயற்சியை டார்பிடோ செய்ய, தவறான நோக்கங்களைக் கொண்ட ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்ததற்கான தெளிவான அறிகுறி இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
‘இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு, கேரள உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என்று கூறிய உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட முன்ஜாமீனை மீண்டும் நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.