பட்டுக்கோட்டை: மெடல் வாங்கிட்டேன் ஆனால், தந்தையை இழந்துட்டேன் என காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர் மல்க கூறினார்.

நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்க மெடல் வாங்கிய இளம் வலுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா, அந்த மெடலை சொந்த ஊருக்கு வந்து தனது தந்தையிடம் காட்ட இருந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்திதான் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து ஆக்லாண்டில் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி தொடங்கிய போட்டிகள், டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கிறது இந்த வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் – வீராங்கனைகள் சென்றுள்ளனர். இவர்களில் லோகப்பிரியாவும் ஒருவர். தமிழக வீரர்கள் அங்கு பல பதக்கங்களை பெற்றுள்ளனர்.  தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

அதுபோல பயிற்சியாளர் பட்டுக்கோட்டை ஜிம் ரவியிடம் பயிற்சி பெற்ற எம்.பி.ஏ. பட்டதாரியான லோகப்பிரியா (வயது 22) 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வலுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா தங்கம் வென்று வெற்றிக்கனி பறிக்கும் வரை காத்திருந்த மாஸ்டர், அவர் தேசியக்கொடி ஏந்தி பதக்கத்தை பெற்று கீழே இறங்கியதும், அவரிடம்  அவரது தந்தை மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்துவிட்டது குறித்த தகவலை தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லோகப்பிரியா கண்ணீர் மல்க கதறினார்.  வெற்றிக்கனியை பறித்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டிய லோகப்பிரியா, பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். மற்ற தமிழக வீர்ர்களும், பெரும் சோகமடைநத்னர்.

இதுதொடர்பாக கண்ணீர் மல்க கூறிய வீராங்கனை லோகப்பிரியா, நான் தங்கப்பதக்கம் வாங்கணும் என்றும், மேலும் மேலும் சாதிக்கணும் என்று எனது தந்தை ஆசைப்பட்டார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் தற்போது தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். ஆனால், அதை பார்தக்கக்கூட அவர் இல்லாமல் போய்விட்டாரே என கதறினார். அவரது சோகத்தை கண்டவர்கள், அவருக்கு ஆறுதல் கூறினர்.

பளுதூக்கும் வீரங்கனையான லோகப்பிரியா,  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை  செல்வமுத்து. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பட்டுக்கோட்டையில் ஒரு பொதுக்கழிவறையில் வசூல் செய்பவராக பணியிற்றி வருகிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த லோகப்பிரியாவின் பளுதூக்கும் ஆர்வத்தை கண்ட  பயிற்சியாளர் ரவியின், அவருக்கு தொடர் பயற்சி அளித்தார். இதன் மூலம் லோகப்பிரியா பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களையும், சான்றிதழ்க்ளையும் பெற்றுள்ளதுடன், தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியிலும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.

பின்னர் அவரது தந்தை உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதை லோகப்பிரியா வீடியோகாலில்  பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்த வெற்றியை ஊரே கொண்டாட வேண்டிய நேரத்தில், அவரது  தந்தையின் இழப்பு வெற்றிக் கொண்டாட்டத்தை தவிர்க்க வைத்துள்ளது. லோகேஸ்வரியின் குடும்பம் தற்போது மிகுந்த வறுமையில் வாடி வருகிறது. ஆகவே இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தங்கமங்கை லோகேஸ்வரியின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள், அரசு வேலை, குடியிருக்க வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.