“நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எப்.ஐ.ஆர். திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது” என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடித்து தயாரிக்க, மனு ஆனந்த இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் எப்.ஐ.ஆர்.

இப்படத்தை வரும் 11ம் தேதி தமிழ்நாடு முழுதும் திரையரங்கில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம், எப்.ஐ.ஆர். படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள திரைப்படம், எப்.ஐ.ஆர்.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு சமீபத்தில் சமூகவலை தளங்களில் வெளியாகி உள்ளது.

எப்.ஐ.ஆர். (FIR) என்பதின் முழு பொருள் ‘ஃபைசல் இப்ராஹிம் ராஸா’ என சொல்லப்படுகிறது

படத்தின் முன்னோட்டம் பார்க்கும் போது இத்திரைப்படம் முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது அந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டியது நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனரின் கடமை.

ஆகையால் இத்திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு இஸ்லாமிய சமூகத்திற்கு ப்ரீவ்யு ஷோ போட்டு காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் சந்தேகத்தை தீர்க்காமல் படத்தை திரையிட்டு திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தால் நடிகர் மற்றும் இயக்குனருக்கு எதிராக சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கடுமையான போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இத்திரைப்படம் பற்றியும் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி விவாதிக்க இன்று (06-02-2022 ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு , சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஆதம் மார்கெட் வளாகத்தில் உள்ள இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.