காட்டு யானைகள் “வழிதவறி” நாட்டுப் பக்கம் வருவதும், உயிரிழப்பதும் கோவை மாவட்டத்தில்தான் அடிக்கடி  நடக்கிறது. ஏன்?
”அத்தனைக்கும் ஆசைப்படு” என்று போதிக்கும் ஈஸா யோகா மைய அதிபர் ஜக்கி வாசுதேவ், காட்டு வளங்களுக்கும் ஆசைப்பட்டு ஆக்கிரமித்ததுதான் காரணம்.

இறந்த யானை - ஜக்கி வாசுதேவ்
இறந்த யானை – ஜக்கி வாசுதேவ்

அதற்கு முன் யானைகள், அவற்றின் வழித்தடங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
யானைகள் ஒரே இடத்தில் தங்காது. நகர்ந்துகொண்டே இருக்கும்.  உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் இயல்புடையது யானைகள்.
இப்படி செல்வதற்கு அவை, வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றும். ஒரு யானையை இந்த ஆண்டு ஓரிடத்தில் பார்த்தீர்களானால், அடுத்த ஆண்டும் அதே யானையை அதே இடத்தில் நீங்கள் பார்க்கலாம்.  அந்த அளவுக்கு யானைகள் துல்லியமாக தனது வழித்தடத்தை பின்பற்றும்.
ஆகவே யானைகள் பயன்படுத்தும் பாதைகளும், அவற்றை ஒட்டிய பகுதிகளும் “யானை வழித்தடம்” என்று அழைக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “கோவை மாவட்டத்தில் உள்ள இந்த யானை வழித்தடங்களை.. சட்டத்துக்குப் புறம்பாக சில கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியிருக்கின்றன. யானைகள் வழிதவறிச் சென்று உயிரை விட இவைதான் முக்கிய காரணம்.
இப்படி ஆக்கிரமிப்பு செய்திருக்கும் நிறுவனங்களில் முக்கியமானது, ஜக்கி வாசுதேவ் ஆளுகையில் செயல்படும் ஈசா யோகா மையம்தான்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை

கோவை மாவட்ட வனப்பகுதியில் வெள்ளியங்கிரி பகுதியில்  சாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில்தான் ஈஷா மையம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
 

ஈஷா மையம் கட்டியுள்ள கட்டிடங்கள்…

1 a

2

3
இது குறித்து கடந்த 2012ம் ஆண்டு, கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் மாவட்ட வன அலுவலருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈஷா மையத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், மின் அதிர்வுகளால் தாக்கப்படும் யானைகள் பாதை குழம்பி வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன” என்றும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறும் இன்னொரு விசயம் நம்மை அதிர வைக்கிறது:
“தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மலைபகுதி அல்லது மலையடிவார பகுதியில் எந்த ஒரு கட்டுமான பணியைச்  செய்தாலும்,   ஹாக்கா (Hill Area Conservation Authority (HACA)) என்ற  மலைத்தள பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி வாங்க வேண்டும்.  சுமார் 4,27,700 சதுர மீட்டர் அளவில் வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டியுள்ள ஈஷா மையம், இதுவரை “ஹாக்கா”  அமைப்பிடம் அனுமதி வாங்கவில்லை!”
இதையடுத்து, கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் (Town and Country Planning) ஈஷா மையத்துக்கு 5.11.2012 அன்று  நோட்டீஸ் அனுப்பியது.  அதில், “முறையான அனுபதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டது.
அது மட்டுமல்ல…
அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும்  இடிக்க நிர்வாக அமைப்புகளுக்கு அனுமதி கொடுத்து ஆணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு  பிறப்பிக்கப்ட்ட அந்த ஆணை இன்றும் அமலில் இருக்கிறது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
“இந்த ஆணையை அமல்படுத்த வேண்டும்.  ஈஷா மையம், அனுமதியின்றி கட்டியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்” என்று 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்  செய்யப்பட்டது.
இன்னொரு சட்டமீறலும் ஈஷா மையத்தில் நடக்கிறது…  இந்த வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில்,  சமஸ்கிரிதி என்னும் வேத பாடசாலை செயல்படுகிறது. அனுமதி இல்லாத கட்டங்களில் இத்தகைய பள்ளிகள் செயல்படுவதும் தவறுதான்.  இது குறித்தும் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஈஷா மீதான இந்த பொது நல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சரி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று நினைக்கிறீர்களா?
ஈஷா மையத்திற்கு 24மணி நேரமும் இலவச மின்சாரம் அளித்து வருகிறது தமிழக அரசு!
அரசு – அரசியல்வாதிகள் செயல்பாடு ஒருபுறம் இருக்கட்டும்.
“அத்தனைக்கும் ஆசைப்படு” என்று போதிக்கும் ஜக்கி வாசுதேவ்,  சட்டத்தை மதித்து செயல்படவும், யானைகள் உயிர்வாழவும் ஆசைப்பட்டாரானால் நல்லது.

  • மதிவாணன்