நெட்டிசன்:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படாது என்றும், மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர்.
பல்வேறு தீர்ப்புகளில் சமூக நீதி காக்கப்படும் என்று மார்த்தட்டிக்கொள்ளும் உச்சநீதி மன்றம் இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு நீதி வழங்கி உள்ளதா? உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு சமூக நீதியா?
நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை வலுக்கட்டாயமாக கலைத்து உள்ளது உச்சநீதி மன்றம்.
இந்த மாபெரும் துரோகத்துக்கு மத்திய அரசும், தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் துணைபோனது பச்சைத் துரோகம்.
நாட்டின் அடிப்படை தேவையான கல்வியில்கூட, நாடு முழுவதும் ஒரே வகையான கல்வித் திட்டத்தை கொண்டுவர முடியாத மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் இன்று ஒரு மாநிலத்துக்கு எதிராக தீர்ப்பை கூறியிருப்பது தமிழகத்தை திட்டமிட்டே வஞ்சித்து வருவதற்கு மேலும் ஒரு சான்றாக தெரிகிறது.
காவிரி வழக்கில், உச்சநீதி மன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க தயங்கிய மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் இன்று தமிழகத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை கொடுத்து, அதை அமல்படுத்த சொல்லியிருப்பதும், அதை சிரமேற்கொண்டு தமிழக அரசு நிறைவேற்றி வருவதும் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்…
உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக யாருக்கு லாபம்…. மத்திய அரசின் பாடத்திட்டங்க ளில் மூலம் படித்த மாணவர்களுக்கு மட்டுமே.
இந்த கல்வித்திட்டத்தில் ஏழை எளிய மக்கள் படிக்க முடியுமா? அதற்கான கல்வி கட்டணம் என்ன? அதை ஏழை எளிய மக்கள் செலுத்த முடியுமா என எதையுமோ கவனத்தில்கொள்ளாமல் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த தீர்ப்பு காரணமாக தமிழகபாட திட்டம் மூலம் நீட் தேர்வெழுதிய 75000 தமிழக மாண வர்களுக்கு 300 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சிபிஎஸ்இ-ன் மத்திய பாடத்திட்டத்தின்மூலம் தேர்வெழுதிய 9000 மாணவர்களில் 4500 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 80 சதவிகிதம் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலத்தை உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் வஞ்சித்து உள்ளது தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதான் சமூக நீதியா? சமூக நீதி என்றால் ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு சமுதாய அமைப்பை கட்டமைப்பது தானே? அது எங்கே உள்ளது……..