தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நியமித்து கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வு, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தலக்குறிச்சி காமராஜ் (எஸ். காமராஜ்) தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
2024 மார்ச் மாதம் தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டை நிறுத்த மாநில அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பல உத்தரவுகளை நீதிமன்றம் வழங்கியதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆனால், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும், பயனுள்ள தீர்வுகள் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் உலர்ந்து போன ஆறுகள் மற்றும் ஓடைகளை மீட்டெடுத்த ராஜேந்திர சிங்கின் சாதனைகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை ஆணையராக (Commissioner) நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
ராஜேந்திர சிங் தனக்குச் சாதகமான நாட்களில் கள ஆய்வு நடத்தலாம் என்றும், அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் டிண்டி மாவனம் (என்ஜிஓ) அமைப்பைச் சேர்ந்த பாலாஜி ரெங்கராமானுஜம் ராஜேந்திர சிங்கிற்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேந்திர சிங் வழங்கும் பரிந்துரைகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்படும் என்று கூறிய நீதிபதிகள் இதன் மூலம் தாமிரபரணி ஆறு மீண்டும் பழைய தூய்மையை அடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த வழக்கு, அடுத்த விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]