டில்லி,

ந்தியாவில் காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது தாஜ்மஹால். இக் கட்டிடம்  முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹால் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. புராதன சிவன் கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,  தாஜ்மஹால் உண்மையிலேயே ஷாஜகான் தன் மனைவிக்கு கட்டிய கல்லறைதானா? அல்லது ரஜபுத்திர மன்னர் முகலாய சாம்ராஜ்யத்திற்கு பரிசாக அளித்த சிவன் கோவிலா? என அய்யங்கார் என்பவர் தகவல் உரிமை ஆணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

தாஜ்மஹால் குறித்த உண்மையை அறியும் பொருட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.

பிரபல வரலாற்றாசிரியர் பி.என்.ஓக் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் சக்ஸ்னா ஆகியோரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாஜ்மகால் குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள தாஜ்மஹாலில் உள்ள அனைத்து அறைகளின் வடிவமைப்பையும் ஆராய வேண்டும் என்றும்,  அதற்குள் மூடப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு குறித்து  ஆய்வு செய்த மத்திய தகவல் ஆணையம், அதனை மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைத்து,  இந்த விஷயத்தில் அரசின்  நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.