பீகார் முதல்வராக திட்டமா? ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்கிய ஆலோசனையை தானே செயல்படுத்தும் பிரசாந்த் கிஷோர்!

Must read

பாட்னா: அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இப்போதைக்கு  இல்லை என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில்  3000 கி.மீ நடை பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிகாரில் ஆட்சியை பிடிக்கும் நோக்கிலேயே அவர் தனது பாதயாத்திரையை அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க, பிரசாந்த் கிஷோர் வழங்கிய முதல் ஆலோசனையே மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திப்பதுதான். அதுபோல செயல்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல்வராக அரியணையில் அமர்ந்து, ஆட்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் பிகார் மாநிலம் முழுவதும் 3,000 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக  அறிவித்துள்ளார். இதனால், அவரது ஆசை முதலில் மாநில முதல்வராவதே என்பது தெரிகிறது.

ஏற்கனவே, தெலுங்கானா மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசராக ஒப்பந்தம் செய்துள்ள பிரசாந்த் கிஷோர், 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாடுபடப்போவதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக பலமுறை சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட காங்கிஸ் தலைவர்களை சந்தித்து பேசிய நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்து விட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர உள்ளனர். அவர்கள் இருக்கும்போது நான் தேவையில்லை என்று நாசூக்காக கூறி, நகன்று விட்டார்.

அதைத்தொடர்ந்து, அவ்வப்போது பரபரப்பு டிவிட்களை போட்டு, அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில்,  மக்களிடம் நேரடி யாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என டிவிட்டினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர்இ “நான் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு நல்லாட்சி குறித்த கருத்தை மக்களிடம் கொண்டு செல்வேன். இன்று கட்சித் தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை. கட்சித் தொடங்குவது குறித்து வருங்காலங்களில் முடிவெடுக்கப்படும்.கட்சித் தொடங்கப்பட்டால், அது பிரசாந்த் கிஷோர் கட்சியாக இருக்காது. மக்களின் கட்சியாக இருக்கும்.

அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் பல்வேறு மக்களை சந்திக்க உள்ளேன்.இதன்மூலும்  பிகாரில் மாற்றத்தை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைக்க உள்ளேன்.  முதல்கட்ட மாக  பீகாரின் மேற்கு சாம்பரான், காந்தி ஆசிரமத்தில் இருந்து வரும் அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிலோ மீட்டர் நடைபயணத்தை தொடங்கவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் முதல் ஆலோசனையே, அவர்கள் மக்களை நேரில் சென்று சந்திக்கச் சொல்வதுதான். அதன்படி தற்போது ஆந்திர முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, மக்களை நேரில் சந்தித்து, அவர்களை குறைகளை கேட்டு வந்தவர், இன்று மாநில முதல்வராக இருக்கிறார். அதுபோல, திமுகவுக்கு வழங்கிய தேர்தல் வியூகத்தில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே அவர் நமக்கு நாமே என்ற திட்டத்தை அறிவித்து,  234 தொகுதிகளுக்கும் பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி, அவர்களை குறைக்களை கேட்டார். அதன்பலன் இன்று தமிழக முதல்வராக அரியனை ஏறி ஆட்சி செய்து வருகிறார்.

அதுபோல, தற்போது பிரசாந்த் கிஷோரும் மக்களை நேரடியாக சந்திக்க நடைபயணத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளார். இதனால், அவரது எண்ணம், மாநில ஆட்சியை பிடிப்பதே என்பது வெளிப்பட்டுள்ளது. பீகாரில் 2025ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி, பீகாரில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தின்  அடித்தளமாகவே அவரது பாதயாத்திரை பார்க்கப்படு கிறது.

More articles

Latest article