நாம் தமிழர் பேசுவது தமிழ் தேசியமா அல்லது பாசிசமா? ஓர் அலசல்!
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்…
தமிழக அரசியில் உலகில், அனைத்து நிகழ்வுகளும் திராவிட இயக்கங்களை சுற்றியே சுழல்கின்றன. மறைந்த அம்மையார் ஜெயலலிதா இருந்தவரையிலும் அதிமுக ஒரு மிதவாத திராவிட இயக்கமாகவும், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு தீவர திராவிட இயக்கமாகவும் செயல்பட்டு வந்தன. இவ்விரு இயக்கங்களின் நிழலில் எந்த ஒரு இயக்கமும் பெரிதாக நிலையெடுக்க முடியவில்லை. மதிமுக, தேதிமுக,பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் இடது சாரி இயக்கங்கள் அனைத்தும் இந்த இரு திராவிட இயக்கங்களை மையமாக கொண்டு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைத்து அரசியல் செய்து வருகின்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும், ஜனநாயக பாதையில், இந்திய அரசியல் சட்டஅமைப்புக்கு உட்பட்டு செயல் பட்டுவரும் இயக்கங்கள்.
இக்காலகட்டத்தில், சுவடுகள் தெரியாத ஒரு இயக்கமாக நாம் தமிழர் கட்சி தனது இயக்கப்பணியை துவங்கியது. போதும் என்ற அளவு அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருந்த படியால் பெரிதாக யாரும் நாம் தமிழர் கட்சி கொள்கை மற்றும் இயக்க செயல்பாட்டை கவனிக்கவோ, ஆய்வு செய்யவோ இல்லை. ஆனால், கால ஓட்டத்தில், அந்த இயக்கத்தில் இருந்து வெளிவந்த தம்பிமார்கள் சொல்லும் கதை கேட்டால், தமிழக மற்றும் ஜனநாயக விரோத சக்தியொன்று நமது காலடியில் முளைத்து வேர்விட எத்தனிப்பதை அறியலாம்.
இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொலைக்காட்சி விவாதமொன்றில் இடது சாரி இயக்க தோழர் பேராசிரியர் அருணன் அவர்களை பொது வெளியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் அவதூறாக மற்றும் தரக்குறைவாக பேசியபோதே அனைத்து இயக்கங்களும் கண்டித்திருக்க வேண்டும். அந்த நிகழ்வு போன்று முன்னதாக தமிழக அரசியல் களத்தில் எக்காலத்திலும் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் ஈடுபட்டதில்லை. அதற்கு முன்னதாக அவர் மதிமுக தலைவர் வைகோ அவர்களையும் அவைக்கு பொருந்தாத விமர்சனம் செய்தார். அக்கால கட்டத்தில், யாரும் அந்த இயக்கத்தை விமர்சித்து ஒரு பேசும் பொருளாக மாற்றவேண்டாம் என்று விட்டதாக தான் தெரிகிறது.
தமிழக அரசியலில், ஏன் உலக அரசியலிலே, ஹிட்லரையும் முசோலினியையும் மேற்கோள்காட்டி அவர்களின் கோட்பாடுகளை மேடையில் பேசிய ஒரே தலைவர் சீமானாகத்தான் இருக்கமுடியும். அந்த கட்சிக்கு, ஹிட்லர் மீதான பற்று அவர்களை ஹிட்லரின் படத்தை இயக்க கூட்டத்தில் வைக்கும் அளவிற்கு தூண்டியது. இந்த நிகழ்வு, அவர்களின் உள்ளூர மறைந்திருந்த ஹிட்லரின் பாசிச பாசத்தை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
பாசிசத்தின் அடிநாத கொள்கை, இனவாதம். இன பெருமை மற்றும் இன தூய்மை பேசி, தன் இனத்தின் இளம் பிள்ளைகளை மூளை சலவை செய்து சாதிக்கமுடியாத இலக்கை காட்டி, அதை சாதிக்கூடிய ஒரே சக்தி தாங்கள் தான் என்ற பிம்பத்தை உருவாக்கி வன்முறையை தூண்டுவது. அதற்கு அவர்கள் கையாளும் கொள்கை, பொய்யுரை பரப்புவது. பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை ஒரு உண்மை போன்று கட்டமைப்பது. அதற்கு ஒரு அமைச்சரையும் அமர்த்தி, பொய்யை முதலில் விடலை பருவத்தில் இருப்போரை நம்பச்செய்து பின் அனைவரையும் நம்பும் படியாக செய்தார்கள். அந்த அமைச்சரின் பெயர்தான் கோயபல்சு. இன்றளவும், பொய்யுரைப்போரை கோயபல்ஸ் என்று அழைப்பதின் காரணம் அதுதான். கோயபல்ஸின் தாரகமந்திரம், பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகும் என்பதாகும்.
இன்றைய தமிழக அரசியலில், பொய்யையும், கட்டுக்கதைகளையும் அதிகம் உரைப்போர் யாரென்றும் அதன் சித்தாந்தம் எங்கிருந்து வந்ததென்றும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
பாசிசத்தின் அடுத்த கொள்கை, சர்வாதிகாரம். அவர்களின் ஆழமான நம்பிக்கை ஜனநாயகம் வளர்ச்சியை தராது என்பதாகும். நாட்டுநலன் கருதும் ஒரு சர்வாதிகாரியல் மட்டுமே ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முடியும் மற்றும் தன் இனத்தின் பெருமை காக்க முடியும் என்று நம்பினார்கள். MEIN KAMPF என்ற ஹிட்லர் எழுதிய புத்தகத்தின் மைய கருத்து அதுதான்.
சீமான் அவர்கள் அவ்வப்போது, மேடைகளில், ஹிட்லர்-இன் MEIN KAMPF புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துக்களே தமக்கு தான் என்று கூறுவதின் சாராம்சமும், அன்பான சர்வாதிகாரத்தின் பொருளும் புரியும் என்று நினைக்கிறன். அந்த அன்பான சர்வாதிகாரம், ஜெர்மனியை மீளா துயரத்தில் ஆழ்த்தியது என்பது தனி வரலாறு. பாசிசத்தின், மற்றுமொரு கூறு, தனி மனித வழிபாடு. ஹிட்லரை தவிர வேறொரு தலைமைக்கான கட்டமைப்பே உருவாகாமல் பார்த்துக்கொள்வது. மொத்த தேசத்தின் வேலைத்திட்டமும் தனி ஒரு மனிதனின் அபிலாஷையில், விருப்பு வெறுப்பில் அடங்கி இருந்தது. சீமான் பின்பற்றுவதும் இதே வழிமுறைதான் என்பதை யதார்த்தமானது என்பதா அல்லது திட்டமிட்ட செயலா என்பதை அவரின் தம்பிகள் தான் கூறவேண்டும்.
பாசிசத்தின் முதல் விரோதி இடதுசாரிகள் தான். நாட்டின் வறுமைக்கும், ஏழ்மைக்கும் உழைக்கும் வர்க்கமும் அவர்களின் சங்கங்களும் தான் காரணம் என்று நம்பினார்கள். அதன் பொருட்டு, இடது சாரி இயக்கங்களை நாடு முழுக்க தடை செய்தார்கள். சீ மானின், இடதுசாரி வெறுப்பு அரசியலும் இதே கொள்கையின் அடிப்படையில் தான். பாசிசம், தமது சம கால அரசியல் இயக்கங்களை விரோதிகளாக பார்த்தார்கள். அவர்களை, அரசியல் களத்திலிருந்தே வன்முறை மற்றும் பொய்யுரைகளால் அகற்ற முனைந்தார்கள். பல கட்சி அரசியல் ஜனநாயகம் அவர்களுக்கு பொருந்தாத கொள்கை. நாம் தமிழர் கட்சியும் அதே பாணியில் தான் அரசியல் செய்கிறது.
ஹிட்லர் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஆனால், நாட்டில் நிலவிய அரசியல் குழப்பத்தில், ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன், முதலாம் உலக போரில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும், ஜெர்மனி மற்ற நாடுகளுக்கு கொடுக்கவேண்டிய இழப்பீடுகளையும் கொடுக்க முடியாது என்று மறுதலித்தார்.
நாம் தமிழர் கட்சி பேசும், தமிழக அரசின் கடன்களை திருப்பி செலுத்த முடியாது என்ற கொள்கையின் ஊற்று எங்கு இருந்து பிறந்தது என்று நாம் அறியலாம். அவருடைய நெய்தல் படையணி கட்டமைப்பதும், ஹிட்லரின் பாசிச கொள்கையில் பிறந்த சித்தாந்தம் தான்.
ஹிட்லர், ஜெர்மானிய மொழி பேசிய மக்கள் இருந்தமையால் ஆஸ்திரியாவையும், போலாந்தையும் வேறு தேசங்களாய் இருந்தும் கைப்பற்றினார்.
நாம் தமிழர் கட்சியின் கட்ச தீவு மீட்பு கனவு இங்கிருந்து பிறந்த சித்தாந்தம் தான்.
பாசிசம் ஆட்சியில் உச்சத்தில் இருந்தவர்களின் ஆசியில் இருந்தது ஆனால் அவர்கள் அக்காலத்தில் இருந்த அனைத்து அரசியல் இயக்கங்களையும் அதிதீவிரமாக எதிர்த்தார்கள். குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தார்கள், ஆனால், அதன் விபரீத விளைவுகளை அகில உலகமும் அனுபவித்தது.
ஹிட்லர் பேசிய நாசிசமும், முசோலினி பேசிய பாசிசமும் யாருக்கும் நல்லதை செய்யவில்லை. மாறாக, அவர்கள் சார்ந்த நாட்டிற்கும் அகிலஉலகிற்கும் அழிவை தந்தார்கள். நாசிசமும், பாசிசமும், இனம், மொழி, பண்பாடு,கலை, கலாச்சாரம், தனித்துவம் என்ற கோட்பாட்டில் தான் அப்பாவி மக்களின் மனங்களை வென்றார்கள். அதற்கு பின்னாக, நிகழ்ந்த விபரீதம் உலகு அறியும்.
நாம் தமிழர் கட்சி செல்லும் பாதை பாசிச பாதையா ? என்பதை தம்பிகள் தான் தீர்மானிக்கவேண்டும்.