டில்லி

விரைவில் குஜராத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டுத்தான் ஜப்பான் பிரதமர் அழைக்கப்பட்டாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

வரும் டிசம்பர் மாதம் குஜராத் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  அந்த தேர்தலுக்காக இப்போதிருந்தே பா ஜ க,  காங்கிரஸ் மற்றும் உள்ள கட்சிகள் தங்களை தயார் படுத்துக் கொள்ள துவங்கி விட்டன.  பா ஜ க சாரீல் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.  காங்கிரஸும் அதே போல தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் புல்லட் ரெயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஜப்பான் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.   இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “குஜராத் தேர்தலை மனதில் கொண்டுதான் ஜப்பான் பிரதமர் அழைக்கப்பட்டாரா?  இது ஒரு கட்சிக்காக நடத்தும் ஒரு நிகழ்வாகவே தோற்றம் அளிக்கிறது.” என கேள்வி எழுப்பி உள்ளது.   காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் மனீஷ் திவாரியும் இதே கேள்வியை எழுப்பி உள்ளார்.  ஜப்பான் பிரதமரின் இரண்டு நாள் பயணமும்   குஜராத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளதையும் இந்தியாவின் தலைநகர் டில்லியில் ஒரு நிகழ்வும் இல்லை என்பதையும் அவர் சுட்டி காட்டி உள்ளார்.