“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் பழங்குடியினரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்று ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன் அவர்கள், “அவர்கள் பழங்குடியினரா சத்திரியர்களா” என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு…  அவர்களைப்போலவே ராஜராஜ சோழன் காலத்தில் துரத்தி அடிக்கப்பட்ட பார்ப்பனர்கள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதோ.. கே.என். சிவராமன் அவர்களது பதிவு:

“பிற்கால சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் படுகொலையும் காந்தளூர் போரையும் முன் வைத்து சில குறிப்புகள்.

‘தீரன்’ படத்தில் பழங்குடியின மக்களை அவமானப்படுத்தியிருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.

இப்படி உரையாடுபவர்களின் தர்க்கப்படி அப்படத்தில் காட்டப்பட்டிருப்பவர்கள் பழங்குடியின மக்கள் என்றால் சட்டீஸ்கர், தண்டகாரண்யா, ஒடிஷா… ஏன் தமிழகத்தில் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களில் வாழும் மக்கள் எல்லாம் யார்?

‘தீரன்’ கதைப்படி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குறிப்பிட்ட அந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ராஜபுதன படைகளில் தளபதிகளாக இருந்தவர்கள். அதுவும் தற்கொலைப் படையாக இயங்கியவர்கள். இந்தக் குறிப்பும் படத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. எனில், அவர்கள் சத்ரியர்கள் அல்லவா?

ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்கு, இந்த மக்களின் தவறான வழிபாடே காரணம் என நம்பி, ராஜபுதன மன்னர்களும் மக்களும் இச்சமூகத்தை ஊர் விலக்கம் செய்கிறார்கள். கட்டிய துணியோடு வெளியேற்றறுகிறார்கள்.

இதன் பிறகு மலைகளிலும் காடுகளிலும் வசித்தவர்கள், வேட்டையாடுவது தடை செய்யப்பட்டப் பிறகு – மீண்டும் ஊருக்குள் நுழைய முடியாத நிலையும் சேர்ந்த பின்னர் – கொலை, கொள்ளை, வழிப்பறி செய்யும் ஆட்களாக மாறுகிறார்கள்.

இது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் கதையில் கொள்ளையர்களின் பின்புலமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அல்லது சரித்திரம் அல்லது குறிப்பு அல்லது … ஏதோ ஒன்று.

இவை அனைத்தும் தெளிவாக வாய்ஸ் ஓவர் வழியாகவும் ஓவியங்கள் மூலமாகவும் (கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் காமிக்ஸ் படிப்பவர் என படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் அதை ஹீரோ கார்த்தி அறிந்து கொள்ளும் கட்டங்களையும் நினைவு கூர்ந்தால்… படத்தின் பிற்பகுதியில் சித்திரக் கதை வழியே கொள்ளையர்களின் வரலாறு விளக்கப்பட்டிருக்கும் விதத்தின் அழுத்தம் புரியும். ரியல் டைரக்டோரியல் டச்) அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கப்படுகிறது.

கதை – கதையாடல் – காட்சிப்படுத்தல்… எல்லாமே இதைத்தான் திரும்பத் திரும்ப பதிவு செய்கிறது.

அப்படியிருக்க படத்தில் பழங்குடியின மக்களை எந்தவகையில் அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

இந்த தர்க்கம் சரிதான் என்றால் பார்ப்பனர்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதுதான் நியாயம்!!!

ஏனெனில் இதேபோன்ற ஒரு சம்பவம் அல்லது சரித்திரம் அல்லது … ஏதோ ஒன்று தமிழக வரலாற்றிலும் அரங்கேறியிருக்கிறது.

அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்த அனைவருக்கும் ஆதித்த கரிகாலனை தெரியும். வரலாற்றுப் பாத்திரமான இவர், ராஜராஜ சோழனின் உடன் பிறந்த அண்ணன். சோழ நாட்டு இளவரசராக அறிவிக்கப்பட்டவர்.

இந்த வருங்கால மன்னரான ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்படுகிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், படுகொலை செய்யப்பட்டது உண்மை.

இந்த கொலையை நிகழ்த்தியவர்கள் யார்?

‘சோமன், இவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன், இவன் தம்பி பரமேசவ்ரன் ஆனா இருமுடிச் சோழ பிரும்மாதி ராஜன், இவரகள் உடன் பிறந்த மலையனூரானும் (இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்), இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும், ராமத்ததம் பேரப்பன் மாரும், இவர்களுக்கு பிள்ளைக் கொடுத்த மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும், இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக…’

என உடையாளூர்க் கல்வெட்டு பெயர்களை பட்டியலிட்டிருக்கிறது…

வரலாற்று ஆசிரியர்களான் கே.கே. பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் இந்த படுகொலையை ஒப்புக் கொண்டு தங்களது நூல்களை எழுதியுள்ளனர்.

ஆனால், கொன்றவர்களின் பின்புலம் குறித்து தெளிவாக பதிவு செய்யவில்லை.

போலவே திருவாலாங்காட்டு செப்பேடும் இந்த உண்மையை மறைத்துள்ளது.

காரணம் –

கொலையாளிகளான இவர்கள் அனைவருமே பார்ப்பன சமூகத்தின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள்.

இதனால்தான் கொலையாளிகளை தண்டிக்கும் பணி –

ஆதித்த கரிகாலனின் அப்பாவான சுந்தர சோழன் காலத்திலோ அல்லது ஆதித்த கரிகாலனின் பெரியப்பா மகனான மதுராந்த சோழன் காலத்திலோ நடைபெறவில்லை.

மாறாக இவர்கள் அனைவருக்கும் பிறகு – கிட்டத்தட்ட 20 – 25 ஆண்டுகளுக்குப் பின் – அரசராக முடிசூட்டப்பட்ட ராஜராஜ சோழன்தான் –

தன் அண்ணனை படுகொலை செய்தவர்களை தண்டித்தார்.

ஓர் இளவரசரனின் மரணத்துக்கான நீதி விசாரணையும், தீர்ப்பும் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழகத்தில் அன்றே வழங்கப்பட்டிருக்கிறது!

தீர்ப்பு இதுதான்:

படுகொலை நிகழ்த்தியவர்களும், அவர்களது வாரிசுகளும் குடும்பத்தினரும் – ஏன் தூரத்து உறவினர்களும்… சுருக்கமாக கிளையோ நேரடியோ மொத்தமாக ரத்த சொந்தங்கள் –

கே.என். சிவராமன்

நாட்டை விட்டே வெளியேற வேண்டும். அதுவும் ஆணோ, பெண்ணோ, வயதானவர்களோ இளமையில் இருப்பவர்களோ…

ஒற்றை ஆடையுடன் செல்ல வேண்டும். கூட ஒரு துண்டு துணி கூட அணிந்திருக்கக் கூடாது. போலவே வேறு எந்த சொத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது.

இப்படித்தான் இளவரசனின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களின் ரத்த சொந்தங்கள் அனைவரும் – கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை – சோழ நாட்டை விட்டு கால்நடையாக வெளியேறினார்கள்; வெளியேற்றப்பட்டார்கள்.

அப்போது மக்கள் அவர்கள் மேல் கல்லெறிந்த சம்பவங்களும் எச்சில் துப்பிய நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் சிகரம் –

காந்தளூர் போர்.

ஒரு பெரிய நிலப்பரப்பின் அரசராக முடிசூட்டப்பட்ட ஒருவர் –

சாதாரண கடிகை மீது போர் தொடுப்பாரா?

அதுவும், தான் மன்னராக முடிசூட்டப்பட்ட பின் நடக்கும் முதல் யுத்தமாக இதை தேர்ந்தெடுப்பாரா… அப்போருக்கு தானே தலைமை தாங்குவாரா..?

ஆனால், ராஜராஜ சோழன் அப்படிதான் செய்தார்.

அரசராக பதவியேற்ற கையோடு படைக்கு தலைமை தாங்கி காந்தளூரில் இருந்த கடிகையை அழித்தார்.

மட்டுமல்ல. இந்த வெற்றியை கல்வெட்டில் பொறிக்கும்படியும் ஆணையிட்டார்!

ஏனெனில், ஆதித்த கரிகாலனை படுகொலை செய்தவர்களுக்கும் அக்கடிகைக்கும் தொடர்பிருந்தது.

இது நடந்த வரலாறு. இதை வைத்து நாட்டை விட்டு ஒற்றை ஆடையுடன் வெளியேற்றப்பட்டார்களே அந்த பார்ப்பனர்களும் அவர்களது ரத்த உறவுகளும்…

அவர்கள் அனைவரையும் பழங்குடியின மக்கள் என்று சொல்லலாமா?” –  இவ்வாறு தனது பதிவில் கே.என். சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.