சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள  பா.ஜ.க சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதன்படி, அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில், தமாகா தரப்பில் யுவராஜா போட்டியிட்டார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவுக்கு பதில், இவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிமுக கூட்டணி சார்பில் யாரை போட்டியிட வைப்பது என்பது தொடர்பாக தாமாகா தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க , தன்னிச்சையாக  14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை , தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், எம்.எல்.ஏ சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, சிவசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் செந்தில், சிவகாமி மகேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.