கொல்கதா:

மித்ஷா என்ன கடவுளா? அவருக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்தக்கூடாதா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

வரும் 19ந்தேதி நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பிரசார பேரணி நடத்தினார்.

அப்போது கொல்கத்தா பல்கலைக்கழகம் வழியாக அமித்ஷாவின் வாகனம் சென்றபோது, அமித்ஷாவுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கோபேக் அமித்ஷா’ என மாணவர்கள் கறுப்புக்கொடி எந்தி போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த பாஜகவின் மாணவர் அமைப்பினர் அந்த கருப்பு கொடிகளை மறைத்தபடியே அமித்ஷா மற்றும் மோடியின் போஸ்டர்கள் அடங்கிய பெரிய பேனரை காண்பித்தனர். இதையடுத்து அமித்ஷாவின் வாகனம் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்ததும், பாஜக மாணவர் அமைப்பினருக்கும் திரிணாமூல் மாணவரணியின ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதேவேளையில், அருகே உள்ள  மற்றொரு கல்லூரியான ஈஸ்வரசந்திர வித்யாசாகர் கல்லூரியில் பாஜகவினர் நுழைந்து சூறையாடினர். பாஜக ஆதரவாளர்கள் இரும்பு கம்பிகள் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர்.  இந்த மோதலில் வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. கல்லூரி வளாகத்திற்குள் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்துள்ளனர்.

இதையடுத்து மோதல் நடந்த இடங்களை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர்,   கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் குறித்து அமித்ஷாவுக்கு தெரியுமா,  இந்த பல்கலைக் கழகத்தில் எத்தனை பெரிய பிரபலங்கள் படித்தனர் என தெரியுமா. இதுபோன்ற தாக்குதல் நடத்தியதற்கு அவர் வெட்கப்பட வேண்டும் என்று காட்டமாக கூறினார்.

மேலும்,  யாரும் அவரை எதிர்த்து போராட்டம் நடத்த கூடாது என சொல்வதற்கு அவர் என்ன கடவுளா, பாஜகவினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர்,  தேர்தலில் கணக்கில் வராத பணத்தை பாஜகவினர் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. சாலைகளில் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் எத்தனை பெரிய கட்அவுட்களை வைத்துள்ளனர். ஏன் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.