சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், மோசடி, போலி, பத்திரப்பதிவு தொடர்பாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, புதிய குடியரசு தலைவர், திரவுபதி முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், மோசடியாக பதிவான பத்திரங்களுக்கான காலவரையறை குறித்த எந்த விவரமும் சட்டத்திருத்தத்தில் இல்லை,
இதற்கிடையில், இதற்கிடையே, பதிவு ரத்து செய்தல் தொடர் பாக, இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்துள்ளன. பதிவுத் துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும், போலி பத்திரப்பதிவு ரத்து செய்வதில் குழப்பம் நீடிப்பதாகவும், எந்த ஆண்டு முதல் நடைபெற்ற பதிவை ரத்து செய்வது என்பது குறித்து சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும், அதை அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். இன்னும் பல வழிகாட்டுதல்கள், வரையறைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பெற வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக போலி பத்திரப்பதிவு மூலம் ஒரு நிலத்தை, தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஒருவர், அதற்கான பட்டாவையும் தன்பெயருக்கு மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்படும்போது, பட்டா மாற்றமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
போலி பதிவு ரத்து செய்யும் சட்ட திருத்தம் சொல்வது என்ன?
இந்j புதிய சட்டத்தின்படி, பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள், மத்திய, மாநில சட்டங்களின்படி தகுதியான அதிகார அமைப்பு, நீதிமன்றம், தீர்ப்பாயம் என இவற்றால் நிரந்தரமாக, தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள அசையா சொத்தை விற்பனை, கொடை, குத்தகை அல்லது வேறு வகையில் உரிமை மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகிய வற்றை பதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்க வேண்டும்.
அதேநேரம் பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால்
பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. அதேநேரம், பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட் களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அதேபோல், பதிவு அலுவலர் முறைகேடான பதிவுகளைச் செய்தால், பதிவு அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆனால், நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட பதிவுக்கு இந்த விதிகள் பொருந்தாது. குறிப்பாக, சரி என்று நம்பி செய்யப்பட்ட பதிவுகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த புதிய சட்டத்திருத்தம் மூலம் பதிவு அலுவலர்கள் பாதிக்கப்படுவதாக பதிவாளர்கள் சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
போலி பத்திரங்களை ரத்து செய்ய துறைத்தலைவருக்கு அதிகாரம்! சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா தாக்கல்…