களத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், போலி கணக்குகள் காட்டிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நோயாளிகளின் தரவுகள் பலவற்றில் மொபைல் எண் பதிவிடாமல் 00000 00000 என்று பத்து பூஜ்ஜியம் போடப்பட்டிருந்ததை தொடர்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னா, ஷேக்புரா மற்றும் ஜமுய் நகரங்களில் உள்ள ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜனவரி மாதம் பெறப்பட்ட 885 பரிசோதனை பதிவுகளில் பெரும்பாலான நபர்களின் தொடர்பு எண்கள் பதிவிடவில்லை.

பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அந்த நபரை தொடர்புகொள்ள முக்கிய தகவலாக இருக்கும் கைபேசி எண்கள் பதிவிடும் இடத்தில் சுமார் 50 சதவீத தரவுகளில் பூஜ்ஜியம் என்று பதிவேற்றியுள்ளனர்.

சில தரவுகளில் ஒரே நபருடைய கைபேசி எண்ணை 5 அல்லது 6 நபருக்கு பதிவேற்றியிருக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட தலைமையகத்தில் உள்ள தரவு மையத்தில் விசாரித்த போது இது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்த தவறு என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது செப்டம்பர் 2020க்குப் பின் கொரோனா பாதிப்புகள் குறைய ஆரம்பித்த பிறகு சுகாதார ஊழியர்கள் இது போன்ற போலி தரவுகளை தயார் செய்து பரிசோதனை செய்ததாக கணக்குகாட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தரவுகளில் இருந்த சில எண்களில் தொடர்பு கொண்ட போது, எனக்கோ என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ எந்த பரிசோதனையும் நடத்த வில்லை. எங்கள் பெயர் மற்றும் செல்போன் எண் எப்படி அவர்களுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை என்று வியந்தனர்.

சிலர் தங்களிடம் சில மாங்களுக்கு முன் தரவு சேகரிக்கபட்டதாகவும் அப்போது கொடுத்த தகவல்களை அவர்கள் பயன்படுத்தியிருக்க கூடும் என்று அச்சம் தெரிவித்தனர்.

தொடர்பு எண் இல்லாத பட்சத்தில் அவரது உறவினர்களின் எண்ணை தொடர்பு எண்ணாக பதிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ள போது அதனை மறந்து 000 என பதிவேற்றியது தொடர்பாக இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.

இதுதொடர்பாக பீகார் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை பலருக்கு நடத்தப்பட்டதாக போலியான தரவுகளை தயார் செய்து அதன் மூலம் நிதிமுறைகேடு நடப்பதாக நகர்புறங்களில் உள்ள சில ஆரம்ப சுகாதார ஊழியர்களே குற்றம்சாட்டுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நன்றி டெய்லி ஹன்ட்