திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்!

Must read

திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்!

ஆன்மிக தலமான மதுரையில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில், இரட்டை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. திருமண தாமதம், குழந்தைப்பேறு இன்மை, கடன் பிரச்சினை, தொழில் விருத்தியின்மை போன்ற பல பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது.

பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை இரட்டை விநாயகரிடம் முன்வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள்.  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பலரும், இத்தலம் வந்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்துக்கள்  மட்டுமல்லாது, வேற்று மதத்தினரும் இரட்டை விநாயகரை வணங்கியும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் மகிழ்வது தான்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  150 ஆண்டுகளுக்கு முன் பழனியப்ப முதலியார் என்பவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஆலமரமும், வேப்பமரமும் நூற்றாண்டைத் தாண்டி நிற்கின்றன.

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுகிறோம். ஆனால் அந்த விநாயகரே ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், விநாயகரை உருவாக்கி அவரை வழிபடுவதாக ஐதீகம்.   அந்தவகையில் தல்லாகுளம் இரட்டை விநாயகர், தனித்துவம் பெற்றவர். பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருகிறார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பலதரப்பட்ட மக்களும் இங்கு வந்து இரட்டை விநாயகரைத் தரிசித்துச் செல்கிறார்கள்.  குறிப்பாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களின் வேண்டுதல் இந்த ஆலயம் வந்தால் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

குழந்தைப் பேறு கேட்டு பிரார்த்தனை செய்த பலருக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன என்றும், அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்திச் சென்றுள்ளனர் என்றும் கோவில் அர்ச்சகர் தெரிவிக்கிறார்.

திருமணத் தடையை போக்குவதில் இரட்டை விநாயகர் சிறப்பு வாய்ந்தவர். திருமணத் தடை உள்ளவர்களுக்குச் சிறப்புப் பரிகாரங்கள் செய்யப்படுகிறது.  உதாரணமாக, ஒருவரின் திருமணத் தடை நீங்கத் திங்கட்கிழமைதோறும் 16 வாரங்கள்  விளக்கு ஏற்ற வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் நல்ல சேதி வந்து சேரும்.

இங்குத் தமிழ் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருமணத் தடை நீங்க விரலிமஞ்சள் மாலை சாத்தி வேண்டிக் கொண்டால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திருமணத்துக்கான உத்தரவாதம் கிடைக்கிறதாம்.

சங்கடஹர சதுர்த்தி பூஜை, கடன் பிரச்சினைக்குத் தேங்காய் மாலை, கல்விக்கு வெற்றிலை மாலை என இரட்டை விநாயகருக்குச் சாத்தி வழிபாடு செய்தால், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். விநாயகர் கவச பாடல்கள் பாடுவதன் மூலம் சகல கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.

More articles

Latest article