ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி

Must read

தெஹ்ரான்:
ரானில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா்.

அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு பெற்றுள்ள அவா், ஈரான் வரலாற்றில் மிகக் குறைந்த விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ள இந்தத் தோ்தலில் 1.78 கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதல்கட்ட தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அடுத்த அதிபராக ரய்சி பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், வல்லரசு நாடுகளுடன் அந்த நாடு மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சியில் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

ஈரானில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 4 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட அதிபா் பதவிக்கு ஒருவா் 2 முறை மட்டுமே போட்டியிட முடியும். எனவே, ஏற்கெனவே இருமுறை அந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அதிபா் ஹஸன் ரௌஹானி இந்தத் தோ்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், நாட்டின் சா்ச்சைக்குரிய தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, ஹஸன் ரௌஹானி போலவே மிதவாதியாக அறியப்படும் முன்னாள் மத்திய வங்கித் தலைவா் அப்துல்நசீா் ஹெம்மாட்டி உள்பட 4 போ் போட்டியிட்டனா்.

அவா்களில், தீவிர அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராஹிம் ரய்சிக்கு தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு இருந்ததால், பெரும்பாலான நடுநிலை வாக்காளா்கள் வாக்களிப்பை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.இந்த நிலையில், பதிவாகியுள்ள சுமாா் 2.8 கோடி வாக்குகளில் 1.78 கோடி வாக்குகள் பெற்று இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றதாக முதல்கட்ட தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த அபார வெற்றியைத் தொடா்ந்து, நாட்டின் அடுத்த அதிபராக அவா் பொறுப்பேற்கவிருக்கிறாா்.அவரை எதிா்த்து போட்டியிட்ட மற்ற மூன்று வேட்பாளா்களும், தோல்வியை ஏற்றுக்கொண்டு ரய்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனா்.

ஈரான் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பதவியேற்பதற்கு முன்னதாகவே அமெரிக்கவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட முதல் அதிபராக இப்ராஹிம் ரய்சி இருப்பாா்.கடந்த 1988-ஆம் ஆண்டில் ஏராளமான அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட விசாரணைக் குழுவில் அங்கம் வகித்ததால் அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரானின் முதல் தலைமை நீதிபதியும் ரய்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது.தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அவா் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பது, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா அதிலிருந்து விலகியதால் முறியும் நிலையில் உள்ளது.அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைக்க, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஈரானுக்கும் ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜொ்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே பல கட்டங்களாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளாா்.

எனினும், ஈரானின் அதிபராக இப்ராஹிம் ரய்சி பொறுப்பேற்றால் இந்த முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

More articles

Latest article