சென்னை:

போராட்டங்கள் காரணமாக பதட்டத்தில் அம்ப்யரை அழைத்து செல்ல மறந்ததுவிட்டது ஐபிஎல் நிர்வாகம். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி இன்று நடக்கிறது. இப்போட்டியை நடத்த கூடாது என இன்று அண்ணா சாலையில் பெரும் போராட்டம் வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு நடுவே எப்படியோ சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்களை நட்சத்திரவிடுதிகளில் இருந்து பத்திரமாக மைதானத்திற்கு அழைத்து வந்துவிட்டது ஐபிஎல் நிர்வாகம்.

ஆனால், அவசரத்தில் அம்பயர்களை அழைத்துவர ஐபிஎல் நிர்வாக அதிகாரிகள் மறந்துவிட்டனர். இதனால் ஆட்டம் துவங்க இருந்த 7.30 மணிக்கு டாஸ் போட முடியவில்லை. இதன்பிறகு அம்பயர்கள் தங்கியுள்ள எழும்பூரிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அவசரமாக கார் அனுப்பப்பட்டது.

இதனால், ஐபிஎல் போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகமெங்கிலும் ஐபிஎல் போட்டியை டிவிகளில் பார்க்கும் பல நாட்டு ரசிகர்களும் போட்டி தாமதமாக தொடங்குவதற்கான காரணம் புரியாமல் குழம்பினர்.
ஒருவழியாக 7.50 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற டோணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.