2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள ஆறு வீரர்கள் ஏலம் மூலம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் வெளிநாட்டு வீரர்கள் 3 பேரும் இந்திய வீரர்கள் 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டாரில் மிட்செல்லை ரூ. 14 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்ததன் மூலம் சென்னை அணிக்காக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற நிலையில் டாரில் மிட்செல் உள்ளார்.

இவரைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சமீர் ரிஸ்வி 8.4 கோடி ரூபாய்க்கும், ஷரதுல் தாக்கூர் 4 கோடி ரூபாய்க்கும் தேர்வு செய்யப்பட்டனர், மற்றொரு இந்திய வீரரான ஆரவெல்லி அவனிஷ் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தவிர, பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ரூ. 2 கோடிக்கும் நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 1.8 கோடி ரூபாய்க்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் பௌலர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இவரைத் தொடர்ந்து 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5 கோடிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஹர்ஷல் படேலுக்கு ரூ. 11.75 வழங்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் :
தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, தீபக் சாஹர், ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல், ஷரதுல் தாக்கூர், சமீர் ரிஸ்வி, ஆரவெல்லி அவனிஷ் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன், மொயீன் அலி (இங்கிலாந்து), மதீஷா பத்திரனா (இலங்கை), மகேஷ் தீக்ஷனா (இலங்கை), டெவோன் கான்வே (நியூஸிலாந்து), மிட்செல் சான்ட்னர் (நியூஸிலாந்து), டாரில் மிட்செல் (நியூஸிலாந்து), ரச்சின் ரவீந்திரா (நியூஸிலாந்து), முஸ்தாபிசுர் ரஹ்மான் (பங்களாதேஷ்) ஆகிய எட்டு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.