வீரர்களின் பணி சுமையைக் குறைக்க தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.)-வுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் காயமடையும் வீரர்கள் மற்றும் மற்ற வீரர்களின் பணி சுமை போன்றவற்றை சமாளிக்க பணி சுமை மேலாண்மை குழு அமைக்க முடிவெடுத்துள்ளது.
50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தவிர டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தகுதி பெற்றால் அதையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் பி.சி.சி.ஐ.க்கு உள்ளது.
மும்பையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 2022ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடர் தோல்வி, இங்கிலாந்தில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் தோல்வி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது மற்றும் 2022ல் அணியின் செயல்திறன் ஆகியவை விவாதிக்கப்பட்டன.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மற்றும் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஐபிஎல் 2023 ன் போது வீரர்களின் பணி சுமையைக் குறைக்க என்.சி.ஏ.-வுடன் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
2022ம் ஆண்டு காயங்கள் காரணமாக பல முக்கிய வீரர்கள் போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “இதற்கான அடிப்படை காரணத்தை நாம் உணர வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை”.
“ஒருவேளை அவர்கள் அதிக போட்டிகளில் விளையாடுவதாகவும் இருக்கலாம். நாம் அவர்களைக் கண்காணிக்க முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் இந்திய அணிக்கு விளையாட வரும்போது அவர்கள் 100% தகுதியாக இருக்க வேண்டும்” என்று ரோஹித் சர்மா கூறினார்.
காயம் மற்றும் பணிச்சுமை மேலாண்மை குறித்து இந்த கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் பெரும்பகுதி காயமடைந்த தீபக் சாஹர், முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவிலிருந்து மீண்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
83 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் விளையாட்டு உருவானது. இப்போது பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறியுள்ள நிலையில் பல்வேறு மாற்றங்கள் அடைந்து வருகிறது.
எந்திரத்தனமாக மாறிவரும் கிரிக்கெட் போட்டிகளில் பந்தய குதிரைகளாக மாறிவரும் கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதி குறித்து தீர்மானிப்பதற்கு தற்போதுள்ள யோ-யோ சோதனைகளுடன் டெக்ஸா ஸ்கேன்களைச் சேர்க்க NCA குழு பரிந்துரைத்தது.
Dexa ஸ்கேன் என்பது உடல் அமைப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான சர்வதேச தரமாகும் – இது மொத்த உடல் கொழுப்பை அளவிடும் பத்து நிமிட சோதனை.
டெக்ஸா ‘எலும்பு அடர்த்தி சோதனை’ என்றும் அழைக்கப்படும் ஒரு எக்ஸ்ரே தொழில்நுட்பம் (இரட்டை ஆற்றல் எக்ஸ்ரே) இது எலும்பு வலிமையை அளவிட பயன்படுகிறது. சோதனையில் ஈடுபடும் நபருக்கு எலும்பு முறிவு அல்லது இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய இது உதவும் இது உடல் அமைப்பை அளவிடுவதற்கும் உடல் கொழுப்பு மற்றும் தசை வெகுஜனத்தை பதிவு செய்வதற்கும் உதவுகிறது.
தவிர, தேசிய அணிக்கு தேர்வு செய்வதற்கு தகுதி பெறுவதற்கு முன்பு “கணிசமான அளவு” உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள், டி-20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வீரர்கள் கிடைப்பார்கள் என்றும் இந்த சிஸ்டத்தில் நுழைவதற்கு முன் வீரர்கள் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்று கூறியுள்ளது.