புதுடெல்லி:
மே 1ம் தேதி முதல் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில் தற்போது 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் வரும் மே 1 ஆம் தேதி முதல் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் தடுப்பூசி போடுவது குறித்து வீரர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஐ.பி.எல். தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அவர்களுக்கு இங்கு தடுப்பூசி போடப்பட வாய்ப்பில்லை என்றும் இந்திய வீரர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசிப் போடப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.