புதுடெல்லி:
ஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒரு பிட்காயின் நன்கொடை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு பலரும் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலர்களை வழங்கினார்.

இவரை தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஆக்சிஜன் சிலிண்டர் தேவைகளுக்காக ஒரு பிட்காயின் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரட் லீ வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா எனது இரண்டாவது தாயகம் போன்றது. இந்த நாட்டு மக்களிடமிருந்து எனது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் கிடைத்த அன்பு அளவற்றது. அதற்காக எப்போதும் எனது இதயத்தில் தனியாக இடம் உள்ளது. தற்போது இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்திய மக்கள் சிக்கி தவிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

மனதளவில் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து போராடும் நேரமிது என்று உணர்கிறேன் அதனால் இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளைக்காக நான் ஒரு பிட் காயின் ஆக்சிசன் நன்கொடை அளிக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 50 ஆயிரம் டாலர்களை வழங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸையும் தனது பதிவில் பாராட்டியுள்ளார் பிரட் லீ. பிரட்லே இந்தியாவிற்கு வழங்கிய ஒரு பிட்காயின் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 41.02 லட்சமாகும். இந்தியாவில் வைரஸின் தாக்கம் நாளொன்றுக்கு 3.5 லட்சம் என்ற அளவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்திய மக்கள் மருத்துவ உதவியின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆக்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.