சென்னை:
தமிழகத்தில் காவிரி போராட்டம் வலுத்துவரும் நிலையில், நாளை ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை ஐபிஎல் போட்டியில் ஆட வரும் வீரர்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டி கடந்த 7ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை சென்னை மேக் ஸ்டேடியத்தில் சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் ஐபிஎல் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதை ஏற்க ஐபிஎல் மறுத்து விட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், `காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உணர்வுபூர்வமான போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டினார்.
மேலும், சென்னை வந்துள்ள ஐ.பி.எல் வீரர்கள் வெளியில் செல்லும்போதோ, ஆடுகளத்திற்கு வரும்போதோ அவர்களுக்கு எதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரிக்கை விடுத்த வேல்முருகன், தமிழர்களின் உணர்வுகளை கிரிக்கெட் வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, சென்னை அணியில் உள்ள தமிழ் தெரிந்த வீரர்கள், மற்ற வீரர்களிடம் எடுத்துரைத்து விளக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பலமுறை வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை விடுத்தும், ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று கூறி, வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி உள்ளார்.
நாளை ஐ.பி.எல் போட்டி நடக்கும் சென்னை மைதானத்தை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய வர், எங்களது கட்சி தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை முற்றுகையிடு வார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
சென்னையில் தங்கியிருக்கும் நீங்கள் ஷாப்பிங் செல்வீர்கள், திரைப்படங்களுக்கு செல்வீர்கள்..அல்லது உங்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவதற்காக வெளியே செல்வீர்கள். அங்கெல்லாம் உங்களுக்கு ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளைத் தாண்டி, வேறு விதமான விளைவுகள் நடந்தால் அதற்கு வேல்முருகனோ, தமிழக வாழ்வுரிமை அமைப்போ அல்லது காவிரி உரிமை மீட்பு இயக்கமோ பொறுப்பாகாது.
இதனை எல்லாம் கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் அவர்களது மனைவிகள் மற்றும் தாயார்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஐ.பி.எல் போட்டி ஒரு சூதாட்டம் என்று குற்றம் சாட்டிய வேல்முருகன், போட்டியை நிறுத்தாவிட்டால் அதில் நடக்கும் மொத்த ஊழலையும் வெளியில் கொண்டுவருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ப்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், அடையாறில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஓட்டலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.