தூத்துக்குடி:

கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது.

இன்றைய போராட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டுள்ளதால், பரபரப்பு நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் புகை காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கேன்சர், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது ஆலையை விரிவாக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் கொந்தளித்த அந்தப்பகுதி மக்கள்,   ஸ்டெர்லைட் ஆலை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் இன்று  57 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.