சென்னை:

ன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 4000 போலீசார் பாதுகாப்புக்காக மைதானத்தை சுற்றி நிற்க வைக்கப்பட்டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்ட 6 குழுக்கள் மைதானம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று  தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், அதை மறுத்த  ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலவி வருகிறது.

இன்று மாலை பல்வேறு அரசியல் கட்சியினர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து உள்ளனர். அதன் காரணமாக அந்த பகுதியில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதான வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.