சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவனத்துக்கு சென்று பிரசாந்த் கிஷோருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
திமுக தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வியூகங்களை அமைக்க , தேர்தல் சாணக்கியர் என கூறப்படும் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியது. இதையடுத்து, அந்நிறுவனத்துடன் பலகோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டு, அந்நிறுவனத்தின் ஆலோசனையுடன், கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை கமிறக்கி, தேர்தலில் களமிறங்கியது.
இந்தநிலையில், கடந்த 6ந்தேதி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு குறித்து அறிந்துகொள்ள பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களநிலவரம் தொடர்பாக 2 முறை விசிட் செய்து, ஆய்வு செய்தார். அங்கு வாக்குப் பதிவு நிலவரம், ஒவ்வொரு மாவட்டம், மாவட்டங்களில் தொகுதிகளில் வாக்குப் பதிவு நிலவரம் ஆகியவை தொடர்பாக விவாதித்தார். ஒவ்வொரு தொகுதி வாக்குப் பதிவு சதவீதமும் எந்த அளவுக்கு திமுக வேட்பாளருக்கு சாதகம் – பாதகம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மீண்டும் ஐபேக் நிறுவனம் சென்ற திமுக தலைவருக்கு அங்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஐபேக் நிறுவன ஊழியர்கள், ஸ்டாலினை கைதட்டி வரவேற்றனர். பின்னர், பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பிரசாந்த் கிஷோர்ல தரப்பில் திமுகவுக்கு 180 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என தெரிவித்ததாக கூசுறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, ஸ்டாலினுடன் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் ஐபேக் அலுவலகத்திலேயே முகாமிட்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.