டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்ருமான ப.சிதம்பரம், மத்திய அமைச்சரவையில் பதவி வகித்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில், மொரீஷியஸை சோ்ந்த 3 நிறுவனங்கள், ரூ.305 கோடி முதலீடு செய்வதற்கு அந்நிய நேரடி முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தது.
இந்த அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அனுமதியை வழங்கியதன் மூலம் ப.சிதம்பரமும், காா்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், தனது நிறுவனம் தொடா்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தனது மகளைச் சந்திக்கவும் அனுமதி கோரியிருந்தார். இந்த மனுமீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறை அவர் வெறிநாடு செல்ல எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அவர் வெளிநாடு செல்ல காா்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்தால், அந்த அனுமதியை அவா் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முந்தைய காலங்களில் வெளிநாடு செல்ல அளிக்கப்பட்ட அனுமதியை காா்த்தி சிதம்பரம் தவறாகப் பயன்படுத்தியதில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
இதை ஏற்று, கார்த்தி சிதம்பரம், ஆஸ்திரியா, பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.