சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
ஜெயலலிதா மறைந்த நிலையில், கடந்த 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. இந்த சம்பவத்தின்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த கொலை, கொள்ளை வழக்கில் மர்மம் இருப்பதாகவும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக திமுக அரசு பதவி ஏற்றதும், குற்றவாளிகளான சயான், மனோஜிடம் மீண்டும் விசாரணை, வாக்குமூலம் பெறப்பட்டது. இதில், எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் பரவின. இது பரபரப்பை ஏற்பட்டது. இதனால், மீண்டும் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும். காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத் தான் தெரியும் என்றும் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வழக்கின் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இது அதிமுக தலைவர்களிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.