அதிமுகவில் தொடரும் குடுமிபிடி சண்டை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்தை மறுத்த அமைச்சர் ஜெயக்குமார்

Must read

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சரின் கருத்து, அதிமுகவின் கருத்து அல்ல என்று மூத்த அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதிமுக தலைவராக இருந்து வந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தின் முதல்வராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால், சசிகலா அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்து, ஓபிஎஸ்சிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்ததால், கோபமடைந்த   ஓபிஎஸ் ஜெ. சமாதியில் மவுன விரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது.  இந்த நிலையில் சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்.

ஆனால், சசிகலா குடும்பத்தினரின் நெருக்குதலுக்கு ஆளான எடப்பாடி மோடி ஆதரவுடன்  ஓபிஎஸ் உடன் கைகோர்த்து, அவருக்குதுணை முதல்வர் பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி உள்பட பல்வேறு பொறுப்புகளும் வழங்கி சமாதானப்படுத்தினார். இருந்தாலும் உள்ளுக்குள் இரு தலைகளுக்குள்ளும்  புகைச்சல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சசட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதில்,  அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், சசிகலா சிறை தண்டனை முடிந்து  வெளியே வந்து அதிமுகவை கைப்பற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் புரளி கிளப்பி வருகின்றனர். இது அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை  சலசலபபை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்களும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அவ்வப்போது வெவ்வேறு கருத்துக்களை கூறி அதிமுகவினரை குழப்பி வருகின்றனர்.

நேற்று முன்தினம்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர் என்று கூறியிருந்தார். ஆனால், இதற்குமறுப்பு தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ,  இதுபோன்ற சூழலில்,  2021ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிவிட் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  ஏற்கனவே நடைபெற்றுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை  எடப்பாடி நிரூபித்துள்ளார். எனவே 2021 சட்டமன்ற  தேர்தலை, எடப்பாடி பழனிசாமியை  முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் முதல்வர், அதிமுக முதல்வர் வேட்பாளர் என்ற கூறிய கருத்து,அதிமுக கருத்து அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

‘ எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று கூறியவர்,  அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து கூறுவது அதிமுகவை பலவீனப்படுத்துவதாகவே இருக்கும்.  முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்றும் வேட்பாளர் குறித்து  அமைச்சர்கள் கருத்து கூறாமல் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவில், இதுநாள் வரை நடைபெற்று வந்த உள்கட்சி மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது. அதிமுகவில்  முதல்வர் பதவிக்கு போடும் குடுமிபிடி சண்டை தற்போது அமைச்சர்களின் வாயாலாயே வெளிப்பட்டு வருகிறது.

அதிமுகவில் நடைபெற்று வரும் இதுபோன்ற மோதல்  காரணமாகத்தான், தமிழக பாஜகவோ, வரும் சட்டமன்ற தேர்தலில், பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று கலாய்த்து  உள்ளது.

More articles

Latest article