டெல்லி:  டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம், அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறியுள்ளது.

 கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் :டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறி இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து கடந்த மே.22ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, கூடுதல் மனு தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அமலக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றம் தெரிவிக்கக் கூடிய ஒவ்வொரு கருத்துக்கள் ஊடகத்தில் மட்டுமல்ல நீதித்துறை அலுவலர்கள், கீழமை நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் மத்தியிலும் வேகமாக பரவுகிறது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்கின் தன்மையை பொறுத்து அதில் இருக்கக்கூடிய சாராம்சங்களை பொறுத்தே நாங்கள் கருத்துக்களை வைக்கிறோம், வழக்கில் ஏதாவது கருத்து கூறினால் அமலாக்கத்துறைக்கு எதிராக பேசுவதாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறுவார், நாங்கள் எந்த அமைப்புக்கு எதிராகவும் பேசுவது இல்லை; உண்மையான தரவுகளை மட்டுமே பேசுகிறோம் என்று கூறி வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தனர். அது வரை ஈடி விசாரணைக்கு தடை நீடிக்கும் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

வரம்பை மீறுகிறது இடி: ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத்துறையின் டாஸ்மாக் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை ED பரப்புகிறது! அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!