சென்னை; டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை பரப்புகிறது என டாஸ்மாக் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு துணை நிற்கும் என்றார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ன கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுபான ஆலைகள் – டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தொடர்பு இருந்துள்ளது. டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டிலிங் நிறுவன சோதனையில் நிதி மோசடி தெரியவந்துள்ளது என்றும் கூறியிருந்தது.
அதாவது, “டாஸ்மாக் அலுவலகங்களில் நடந்த சோதனையின் போது, டிரான்ஸ்பர் போஸ்டிங்ஸ், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில டிஸ்டில்லரி நிறுவனங்களுக் குச் சாதகமாக இன்டென்ட் ஆர்டர்களில் முறைகேடு நடந்த ஆவணங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ30 அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்என்ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள் தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர், ஏஆர் ஹோல்டிங் போன்ற பாட்டில் நிறுவனங்களுடன் பெரிய அளவில் பண மோசடி நடந்துள்ளது. இதன் மூலம், சட்ட விரோத பணப் பறிமாற்றம் அம்பலமாகியுள்ளதோடு கணக்கில் காட்டாத ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததுள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால், அவை தள்ளுபடி செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராக டாஸ்மாக் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறையினர் நேற்று (மே 6ந்தேதி) அவர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் தலைவர் விசாகன் வீடு உள்ள பகுதியில் கிழிக்கப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாகவும் விசாரணை மற்றும் ரெய்டு தொடர்கிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு துறை அமைச்சரான முத்துசாமி, அமலாக்கத்துறை அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடத்தி வருவதாகவும், தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், அமலாக்கத்துறை ரெய்டில், டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறியவர், அரசியல் உள்நோக்கத்தோடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் ED சோதனை செய்தது. முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைக்காத நிலையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்ததாக கற்பனை செய்தியை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறது என்றார்.
இடி வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த டாஸ்மாக் அலுவலகர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக கூறியவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு துணை நிற்கும் என்றார்.
நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: தமிழ்நாடு அரசுமீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…