ண்டிகர்

விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. 

விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசை ஏற்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன.

இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.இதில்  சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

பிப்ரவரி 13 ஆம் தேதி இவர்கள் டெல்லியில் மிகப்பெரிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதால் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் செல்ல உள்ளனர். இதையொட்டி அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதாவது நாளை காலை 6 மணி முதல் வரும் 13ம் தேதி இரவு 11.59 மணி வரை அரியானாவில் 7 மாநிலங்களில் இணையச் சேவையைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13ம் தேதிவரை இணையச் சேவை துண்டிக்கப்பட உள்ளது.

இணையத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்) போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில், மொபைல் போன்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தவறான தகவல், வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாகச் சேர்வதைத் தடுப்பதற்கும் சேவை களை நிறுத்தி வைப்பதாக உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அரியானாவில் பல இடங்களில் விவசாயிகளின் ஊர்வலத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்துள்ளனர்.