சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது உண்மைதான் என்றும், ஆபத்தான சூழல் உருவாகி இருப்பதாகவும், மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 989 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உயர்நதுள்ளது.
இதற்கிடையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதுடன், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அங்கு பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. அதுபோல, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களால், தொற்று பரவல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையிலும் தொற்று பரவல் தீவிரமாகி இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ளார். தொற்று பரவலை தடுக்கும் வகையில் மீண்டும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், சுமார் 4 ஆயிரம் பேர் பகுதி பகுதியாக சென்று தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் என்றவர், சென்னையில் விரைவில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நேரு மைதானத்தில், ஒரே நாளில் மூவாயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னமாக ஆணையர் பிரகாஷ், அடையாறு மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நுண்கிருமி தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதற்கிடையில், நேற்று செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதுபோல, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப் படுத்த அறிவுறுத்தப்பட்டதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி தரவும், சென்னையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.