கோடநாடு எஸ்டேட் மர்ம கொலை வழக்கில், சாட்சிகளிடம் வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் விசாரணை தொடங்கப்பட உள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றாட்டுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய வழக்கின் விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ப.வடமலை, வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கும் என்று அறிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் நந்தகுமார், கோடநாடு கொலை வழக்கில் முக்கிய சாட்சியமான, கொலையை நேரில் பார்த்த கிருஷ்ண தபா நேபாளத்தில் இருப்பதாகவும், அவர் தமிழகம் திரும்பிய பின்னர் சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினமே சாட்சிகளிடம் விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின்னர், சயான் மற்றும் மனோஜ் தரப்பில் ஜாமீன் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக இருவருக்கும் ஜாமீன் வழங்கிட வேண்டும் என்று இருவரது வழக்கறிஞரான சிவக்குமார் கேட்டுக்கொண்டார். ஏனெனினும், இந்த மனுவையும் சாட்சிகளின் விசாரணையின் போது, விசாரிப்பதாக தெரிவித்து, இம்மனுவையும் வழக்கோடு இணைத்து நீதிபதி வடமலை வழக்கை ஒத்திவைத்தார்.