சென்னை;

நீண்ட இடைவேளைக்கு பிறகு பல்வேறு துறைகளின் தொழில் வல்லுனர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். அவர்களின் தேவைகள், கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் தொழில் துறை அமைச்சர் சம்பத், தொழில் துறை மூத்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழக அரசின் இந்த செயல்பாடு அரசின் ஆக்கப்பூர்வ செயல்பாடு. இது ஒரு நல்ல முயற்சி என்று கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் பாராட்டு தெரிவித்தனர். மாநிலத்தில் தொழில் முதலீட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கூட்டத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் வேணு சீனிவாசன், அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் வினோத் தசாரி, சிஐஐ தென் மண்டல துணைத் தலைவர் தினேஷ், எம்ஆர்எப் தலைவர் கே.எம்.மேமன், கெவின் கேர் சிஎம்டி ரங்கநாதன், அப்பல்லோ மருத்துவமனை சிஇஒ சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் விமானநிலைய இணைப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடுத்துக் கூறினார்.

இது குறித்து வேணு சீனிவாசன் கூறுகையில், ‘‘அரசு அவ்வப்போது கலந்துரையாட வேண்டிய அவசியம் தொழில் துறைக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

ரங்கநாதன் கூறுகையில், ‘‘ அரசின் இந்த நடவடிக்கை வரவேற்க்கத்தக்கது. வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்க தொழில் துறைக்கு என்ன தேவை என்று கேட்டறிந்தனர். தொழில் நிறுவனங்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு அரசு உதவ முடியும். எங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

சிஐஐ தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘விமானநிலைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தோம். முன்னுரிமை அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்’’ என்றார்.

சிஐஐ துணைத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், ‘‘சிறு குறு நடுத்தர துறைகளுக்கான அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கடற்கரை மற்றும் துறைமுக மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்’’ என்றார்.