புதுடெல்லி: இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த ஏற்றுமதி சலுகையான ஜிஎஸ்பி, ஜுன் 5ம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் ரத்துசெய்யப்பட்டு விட்டதையடுத்து, பதில் நடவடிக்கை எடுத்த இந்தியா, தற்போது, இ-வணிகம் மற்றும் தரவு பாதுகாப்பு மசோதாக்கள் மூலமாக, கூடுதல் பொருளாதார பதில் நடவடிக்கைகளில் இறங்கவும் திட்டமிட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்க நிறுவனங்களின் மீது பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா ரத்துசெய்த பின்னர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே, வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே, அதற்கு பதில் நடவடிக்கையாக 28 அமெரிக்க பொருட்களின் மீதான சுங்க கட்டணத்தை மாற்றியமைக்கும் அறிவிப்பை ஜுன் 16ம் தேதி வெளியிட்டது இந்தியா.

அதேசமயம், இந்தியா – அமெரிக்கா இணைந்து பங்காற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் கிடையாது. ஜுன் 25 – 26 தேதிகளில், இந்தியாவிற்கு வருகைதரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம், தற்போது இரு நாடுகளுக்கிடையே நிலவும் வணிகச் சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.