ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்றுஅதிகாலை செலுத்திய EOS-04 துருவ செயற்கைக்கோள் வெற்றிகரமான விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இது இந்த ஆண்டின் முதல்செயற்கை கோள் என்பது பெருமைக்குரியதுடன், இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-04 ஐ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து   ஏவுகணை வாகனம் PSLV-C52 :மூலம் விண்ணுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை  06:17 அளவில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், 529 கிமீ உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில்  நிலை நிறுத்தப்பட்டது.

முன்னதாக PSLV-C52/EOS-04 ஏவுவதற்கு வழிவகுக்கும் 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் செயல்முறை நேற்று (13ந்தேதி) அதிகாலை 04:29 மணிக்கு தொடங்கியது.

1710 கிலோ எடையுள்ள இஒஎஸ்-04 என்ற அதி நவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனுடன் மேலும் 3   செயற்கைக்கோள் களும் இன்று , ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி.52 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

EOS-04  ரேடார் செயற்கைக் கோள் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும். பருவ நிலை மாறுதல், விவசாயம், பேரிடர் மேலாண்மை வனப்பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதனுடன் செலுத்தப்பட்ட   அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு மாணவர்கள் வடிவமைத்த சிறிய ரக இன்ஸ்பயர் சாட் -1 செயற்கைகோளும், இந்தியா, பூட்டான் நாடுகள் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ள ஐ.என்.எஸ் – 2TD என்ற சிறிய ரக செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

புவியில் இருந்து 529 கிலோமீட்டர் உயரத்தில் கொண்ட சூரிய ஒத்திசைவு பாதையில் 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.